தொல்லியல் துறைக்கு கோவையில் தனி நூலகம்!


கோவையில் உள்ள தொல்லியல் யாக்கை நூலகத்தில் தொல்லியல் குறித்த பயிற்சி வழங்கும் யாக்கை அறக்கட்டளை தலைவர் சுதாகர் நல்லியப்பன்.

கோவை: அறிவை வளர்க்கும் இடமாக நூலகம் விளங்கி வருகிறது. அந்தவகையில் சென்னையில் கன்னிமாரா பொது நூலகம் முக்கிய அறிவுச் சின்னமாக விளங்கி வருகிறது. ஆசியாவிலேயே பெரிய நூலகமாக சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது.

சர்வதேச தரத்துடன் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. அடுத்து கோவை மாநகரிலும் தமிழக அரசால் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. இது ஒரு புறம் இருக்க இலக்கியம், தொல்லியல், வரலாற்றுக்கென தனி நூலகத்தை கோவை யாக்கை மரபு அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து, அறக்கட்டளையின் செயலாளர் குமாரவேல் ராமசாமி கூறியதாவது: யாக்கை மரபு அறக்கட்டளை தொல்லியல், ஓலைச்சுவடி, கல்வெட்டியல், பெருங்கற்படை சின்னங்கள், பாறை ஓவியங்கள் குறித்த வரலாற்று தகவல்களை தேடி சேகரிப்பது, ஆய்வு தளங்களில் வெளியிடுவது போன்ற பணிகளை செய்து வருகிறது.

மேலும் தொல்லியல், கல்வெட்டியல் தரவுகளை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தியும் வருகிறது. கடந்த 2017-ல் தொடங்கிய பயணத்தின் தொடர்ச்சியாக தொல்லியல், கல்வெட்டியல் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்யும் மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் தொல்லியலுக்கென தனி நூலகத்தை கடந்த 2022-ல் தொடங்கினோம். மூத்த வரலாற்று அறிஞர் இரா.ஜெகதீசன் இந்நூலகத்தை தொடங்கி வைத்தார்.

இங்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் கள ஆய்வுகள் குறித்த பயிற்சியும் வழங்கப் படுகிறது. அதன் வழியே ஒவ்வொருவரும், கள ஆய்வு செய்து அனுபவ ரீதியாக அறிவைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். அவர்கள் வரலாறு, இலக்கியம், தொல்லியல் துறை சார்ந்த புத்தகங்களையும் ஆய்வுக்கு பயன்படுத்தும் நோக்கில் நூலகம் செயல்பட்டு வருகிறது.

சுமார் ஆயிரம் புத்தகங்களுடன், டிஜிட்டல் வழியில் தொல்லியல் வரலாறு குறித்து மட்டுமே சுமார் 30 ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளோம். இதில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளும் அடங்கும்.

இந்த நூலகத்தின் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி இடை பயிற்சியும் வழங்கி வருகிறோம். இதில் தொல்லியல், வரலாறு, மொழி பாடம், சமூகப் பணி, விஷுவல் கம்யூனிகேஷன் ஆகியப் பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பயிற்சி பெற வருகின்றனர். இதுவரை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நூலகத்திற்கு வந்து சென்றுள்ளனர். இதில் 950 பேர் இடைபயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.

ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை நூலின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த பாறை ஓவியங்களுக்கான அமைப்பின் பென்னி குரியன், புதுச்சேரி மானுடவியல் துறை பேராசிரியர் பக்தவத்சல பாரதி, அருங்காட்சியக காப்பாட்சியர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் நூலகத்திற்கு வருகை தந்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியும் சான்றிதழ்களையும் வழங்கி உள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், வேளாளர் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளுடன் கண்காட்சி, ஆய்வரங்கம் நிகழ்வுகளை நடத்தியுள்ளோம். மேலும் 18 கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறோம்.

எங்களது செயல்பாடுகளை கவனித்து சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் ‘கணினி’ தொழில்நுட்ப பெருநிறுவனம் 5 மடிக்கணினிகளை வழங்கியுள்ளது. அதன்மூலம் தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வுப் பணிகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் மயமாக கல்வி இடைபயிற்சி மாணவர்கள் புரிந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குள்ள தகவல்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தொல்லியல் கழகம், Annual Congress of the Place Names Society of India, South Indian History Congress போன்ற வெவ்வேறு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இப்பணியை யாக்கை குழு தன்னார்வ நோக்கில் செயல்படுத்தி வருகின்றது. இத்தகைய வாய்ப்புகளை கல்லூரி மாணவ, மாணவிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

x