தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பதநீர் உற்பத்தி பாதிப்பு


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கோடை மழையால் பதநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சாரல் மழையே பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இன்றும் சாரல் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவைக் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 51.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

118 அடி கொள்ளளவைக் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 245 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாக்களில் பதநீர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகா பகுதிகளில் பனைமரங்கள் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் பதநீர் உற்பத்தி களைகட்டும். மற்ற மாதங்களில் பதநீர் உற்பத்தி குறைந்திருக்கும்.

கோடை காலத்தில் பதநீருக்கு அதிக தேவையிருப்பதால் பனைத்தொழிலாளர்களும், பதநீர் விற்பனையாளர்களும் முழுவீச்சில் பதநீர் இறக்குதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருப்பார்கள். இவ்வாண்டு பிப்ரவரியில் தொடங்கிய பதநீர் சீசன் இம்மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்தது ஆனால், சமீப நாட்களாக பெய்துவரும் மழையால் பதநீர் உற்பத்தி பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழைகாலத்தில் பனைமரங்களில் ஏறி பதநீர் இறக்க முடியாத நிலை உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.