நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி


நீர்வரத்து சீராகியுள்ளதை தொடர்ந்து கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

பெரியகுளம்: நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரிய குளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் அருகே வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 13-ம் தேதி முதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மழையின் அளவு குறைந்ததால் நீர்வரத்து சீரானது. இதனைத் தொடர்ந்து, அருவி யில் குளிக்க நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இது குறித்து வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் கூறுகையில், காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.30. கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்தி அருவி வரை பேட்டரி காரிலும் செல்லலாம். தற்போது மீண்டும் மழைக்கான அறிகுறி உள்ளதால் நீர்வரத்துக்கு ஏற்ப பயணிகள் தொடர்ந்து அனு மதிக்கப்படுவர் என்றார்.