“வேலை திருப்தியா இருக்கு!” - புதுக்கோட்டை முதல் பெண் நடத்துநர் கவுரீஸ்வரி உற்சாகம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக நடத்துநர் பணி பெற்ற பெண்ணை பலரும் வியந்து பாராட்டுகின்றனர். இந்த வேலை திருப்தி அளிப்பதாக அந்த பெண் நடத்துநர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்த சந்திரசேகரன் கடந்த 2008-ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், திருமணமாகி அறந்தாங்கி அருகே குருந்திராக்கோட்டையில் வசிக்கும் சந்திரசேகரின் மூத்த மகள் கவுரீஸ்வரி (28) தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கும்படி அரசுக்கு கோரிக்கைமனு அளித்திருந்தார்.

இதையடுத்து, புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழாவில் இவருக்கும், காரைக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் என 2 பேருக்கு நடத்துநர் பணிக்கான ஆணையை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக பெண் நடத்துநராக பொறுப்பேற்றுள்ள கவுரீஸ்வரி தனது பணி குறித்து கூறியதாவது: எனக்கு அளிக்கப்பட்டுள்ள நடத்துநர் வேலையை மனப்பூர்வமாக ஏற்று பணிபுரிந்து வருகிறேன்.

தற்போது புதுக்கோட்டையில் பல்வேறு நகர் பேருந்துகளில் பணிபுரியும் என்னை பலரும் வியப்போடு பார்ப்பதுடன், சிலர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். நடத்துநர் பணிக்கு வந்துள்ள எனக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த வேலை திருப்தியாகத் தான் உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

x