வாவ்... அடையாளமே தெரியலை! - தஞ்சையில் ஒரு குளத்தையே உருமாற்றிய இளைஞர் படை


இளைஞர்களால் தூர் வாரப்பட்ட வஜ்ர தீர்த்த குளம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வஜ்ரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகிலேயே செம்புரான் கற்களால் எண் கோண வடிவத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 50 அடி ஆழ வஜ்ர தீர்த்தக் குளம் உள்ளது.

வல்லம் பகுதியில் உள்ள பெரிய நீர் நிலைகளில் ஒன்றாகவும், அப்பகுதியில் புனித தீர்த்தக் குளமாகவும் இந்தக்குளம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஏகவுரியம்மன் கோயிலின் ஆடித் திருவிழாவின்போது, வஜ்ரத் தீர்த்தக் குளத்தில் இருந்துதான் புனித நீர் கொண்டு செல்லப்படும்.

காலப்போக்கில் இந்தக் குளம் தூர்ந்து போய், சீமைக்கருவேல மரங்கள் மண்டிவிட்டன. இதனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப் புறவியல் துறை ஆராய்ச்சி மாணவரான வல்லத்தைச் சேர்ந்த பொன்.வினோத் (34) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்தக் குளத்தை தங்களது சொந்த முயற்சியில் தூர்வார களம் இறங்கினர்.

இதற்காக ‘வஜ்ர தீர்த்தம் உழவார குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஜூன் 9-ம் தேதி முதல் இந்தக் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளனர். தங்களது சொந்த நிதி மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தூர் வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இதுவரை இக்குளத்தில் சுமார் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், பாதி பணி நிறைவுற்றபோது குளத்தில் நீர் ஊற்றெடுத்ததாகவும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தூர் வாருவதற்கு முன்பு இருந்த வஜ்ர தீர்த்த குளம்.

இது குறித்து பொன்.வினோத் கூறியது: இந்த கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு விழாவை இந்த தீர்த்தக் குளத்தில் வெகு சிறப்பாக கொண்டாடி வந்துள்ளனர். காலப்போக்கில் இந்தக் குளம் தூர்ந்து போனது. இந்த குளத்தைதூர் வார எனது சகோதரர் ரஞ்சித்தான், முதலில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு அவர் இயற்கை எய்தியதால், அந்தப்பணியை நானும், எனது நண்பர்களும் சேர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எங்களது இந்த முயற்சிக்கு இந்து சமய அறநிலையத்துறையும், வல்லம் பகுதி மக்களும் ஆதரவளித்தனர். பொக்லைன் உதவியுடன் தற்போது 50 அடி ஆழத்துக்கு தூர் வாரப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

x