மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் கல்லூரி மாணவர்களுக்கு மரபு நடை நிகழ்வு


மதுரை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இன்று மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் கல்லூரி மாணவர்களுக்கான மரபு நடை நடைபெற்றது. இதில் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக மாணவர்கள், மதுரை பாத்திமா மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் ஸ்டேண்டர்டு மகளிர் கல்லூரிகளின் வரலாற்று துறை மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தொல்லியல் துறை அலுவலர் ஆசைத் தம்பி மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையின் கட்டிடக் கலை மரபு பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார். அதேபோல் திருமலை நாயக்கர் அரண்மனையின் தொல்லியல் அலுவலர் ஆனந்தி, அரண்மனையின் வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் திருமலை நாயக்கர் அரண்மனையின் கட்டிடக்கலை, மன்னர் நாயக்கர் வரலாறு குறித்தும் விளக்கினார். மேலும், திருமலை நாயக்கர் அரண்மனை வேதியியல் பாதுகாப்பு முறைமைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மாணவ - மாணவியர் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.