திண்டுக்கல் நெசவாளருக்கு ‘தேசிய கைத்தறி விருது’!


நெசவாளர் பாலகிருஷ்ணன்

திண்டுக்கல்: மத்திய அரசின் தேசிய கைத்தறி விருதுக்கு திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தேர்வாகியுள்ளார்.

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆண்டுதோறும் ஆக.7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நெசவாளர்களுக்கு பல பிரிவுகளின் கீழ் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023-ம் ஆண்டுக்கான தேசிய கைத்தறி விருதுக்கு, தமிழகத்தில் இருந்து திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நெசவாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

அதில், திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி டி.எல்.எச் 32 ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினரும், அதே பகுதியைச் சேர்ந்தவருமான கே.பாலகிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.7-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்க உள்ளார்.

இது குறித்து நெசவாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவு மூலம் சேலை நெய்து வருகிறேன். நான் நெய்த அசல் பருத்தி ரக சேலையை, விருதுக்கு பரிந்துரை செய்ததற்காக திண்டுக்கல் கைத்தறித்துறை மற்றும் ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். மத்திய அரசின் விருது பெறுவது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது எனக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

x