மதுரை: சாலையில் யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற 1000 ரூபாயை எடுத்து காவல் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்த பள்ளி மாணவர்களை, அவர்களுக்கு பள்ளிக்கே வந்து காவல் உதவி ஆய்வாளர்கள் பாராட்டிச் சென்றனர்.
மதுரை எழுமலை அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் முகேஷ், விஷ்வா ஆகியோர் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். இன்று வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக உத்தப்புரம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது ரூ.500 (ஒரு நோட்டு), ரூ.200 (2 நோட்டு), ரூ.100 (ஒரு நோட்டு) என மொத்தம் 1000 ரூபாய் வழியில் சிதறிக் கிடந்தது. அதனைக் கண்ட மாணவர்கள் அங்கிருந்தோரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் தங்களது பணம் இல்லை என்றதால் போலீஸில் ஒப்படைக்க முடிவெடுத்தனர்.
அங்கிருந்து எழுமலை பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள காவல் நிலையத்தில் அந்தப் பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். மாணவர்களின் நேர்மையான செயலை போலீஸார் பாராட்டி அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை உயரதிகாரிகளிடம் உதவி ஆய்வாளர்கள் முருகராஜா, செல்லச்சாமி ஆகியோர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த மாணவர்களின் நேர்மையை பாராட்டுமாறு உயரதிகாரிகள் அளித்த ஆலோசனையின்படி உதவி ஆய்வாளர்கள் இருவரும் போலீஸாருடன் பள்ளிக்குச் சென்று அந்த மாணவர்களை அழைத்து பாராட்டினர்.அப்போது உதவித் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் மணிக்குமார், செந்தில்குமார், முருகேசன், முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் தனபால் கூறுகையில், “மாணவர்களிடையே நேர்மை பண்பு வளரும் வகையில் பள்ளியில் ‘நேர்மையாளர் கடை’ இயங்கி வருகிறது. மாணவர்கள் தமக்கு தேவையான பொருளை அதற்குரிய நேர்மையான பணத்தைச் செலுத்தி எடுத்துக்கொள்ளும் முறை உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கற்ற பாடம் தான் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செய்துள்ளது. ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளைக் கற்றுத் தருவதால் மாணவர்களிடையே நேர்மை பண்பு வளர்கிறது” என்றார்.