“உலகளவில் புற்றுநோய் தாக்கம் மிக வேகமாக அதிகரிப்பு” - மருத்துவ நிபுணர்கள் கவலை


மதுரையில் ஒருநாள் புற்றுநோய் சிகிச்சை பயிலரங்கம் நடைபெற்றது.

மதுரை: “பல்வேறு காரணங்களால் இன்று உலகளவில் புற்றுநோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து உள்ளது,” என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த ஒரு நாள் புற்றுநோய் பயிலரங்கில் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

தேசிய புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கம், (IASO) மற்றும் தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கம் (TASO) வழிகாட்டுதலின்படி மதுரை மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பில் மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா அரங்கில் ஒரு நாள் புற்றுநோய் சிகிச்சை பயிலரங்கம் நடத்தப்பட்டது. சுமார் 700 இறுதி ஆண்டு மருத்துவ (MBBS final year ) மாணவர்களுக்கு புற்றுநோய் காரணிகள், சிகிச்சையின் அடிப்படை விதிகள், சிகிச்சையின் முறைகள் குறித்து புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் விளக்கங்கள் வழங்கினர். இதில் மதுரை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மற்றும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய புற்றுநோய் நிபுணர்கள், “பொதுவாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள், பட்ட மேற்படிப்புகளாகவும் (Post Graduate), சிறப்பு மேற்சிகிச்சை பிரிவுகளாகவும், (super speciality) உள்ளன. இளங்கலை மருத்துவர்களுக்கு இந்த துறைகளில் பரிச்சயம் கிடைப்பதில்லை. பொதுவாக மருத்துவப் படிப்பை முடித்து அவர்கள் தனியாக தொழில் தொடங்கினாலோ, மருத்துவம் சார்ந்த அல்லது வேறு ஏதேனும் பட்ட மேற்படிப்பு சென்று விட்டாலோ புற்றுநோய் துறையில் ஏற்பட்டிருக்கும் தனித்துவமான வளர்ச்சி அவர்களுக்கு சென்றடைவதில்லை.

இதனால் புற்றுநோய்களை அணுகுவது குறித்து ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இதை தேசிய புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கமும் தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கமும் உணர்ந்து, இந்த இடைவெளியை களையும் பொருட்டு இதுபோன்ற கருத்தரங்குகள், தொடர் பயிலரங்கங்கள் நடத்தப்படுகிறது. பல காரணங்களால் இன்று உலகளவில் புற்றுநோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து உள்ளது.

அதேநேரத்தில் மருத்துவ ரீதியாக அதை எதிர்கொள்ளும் ஆராய்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.புற்றுநோய் கட்டுப்பாடு, அதன் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கு அரசு பெரும் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் புற்றுநோய் குறித்து அடிப்படை அறிவியலை இளங்கலை மருத்துவ மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த பயிலரங்கத்தின் நோக்கமாகும்,” என்றனர்.

முன்னாள் தேசிய புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சி. மோகன் பிரசாத் பயிலரங்கை தொடக்கி வைத்தார். மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் சி.தர்மராஜ் முன்னிலை வகித்தார். தேசிய புற்றுநோய் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் டாக்டர் ருத்ர பிரசாத் ஆச்சாரியா டெலியில் இருந்து இந்நிகழ்வில் காணொலி வழியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழ்நாடு புற்றுநோய் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம், செயலாளர் பேராசிரியர் டாக்டர் அய்யப்பன் மற்றும் பொருளாளர் பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு மருத்துவ மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.கருத்தரங்க ஏற்பாடுகளை மதுரை புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.ரமேஷ் செய்திருந்தார்.

x