கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக இருக்கும் இ-டாய்லெட்களை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்யவும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செல்லவும் வரும் சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒரு இ-டாய்லெட், நகராட்சி சார்பில் 2 இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த கழிப்பறைகள் பல மாதங்களாக பயன்பாடின்றி வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன. இதனால் கழிப்பறைகளை தேடி அலையும் நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். நாளை (மே 17) தொடங்கி 10 நாட்களுக்கு மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். எனவே, பயன்பாடின்றி உள்ள இ-டாய்லெட்களை உடனே சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ஏரிச்சாலை பகுதியில் மொபைல் டாய்லெட் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.