தொடர் மழையின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி @ நீலகிரி


உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. கிண்ணக்கொரை, எமரால்டு, இத்தலார், அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா சாலைகளில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்ட பொக்லைன் உதவியுடன் உடனுக்குடன் அகற்றப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது. மிதமான மழையுடன் கடும் குளிர் நிலவுகிறது. கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது.

மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கபட்டது. இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாமல் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கனமழை காரணமாக தொடப்பெட்டா காட்சி முனை பைன் ஃபாரஸ்ட், அவிலாஞ்சி சுற்றுலா மையம் ஆகியவை கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளன. முதுமலையும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் இன்றும் மழையின் தாக்கம் குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மழையின் தாக்கம் குறைந்ததால் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மலை சரிவுகளில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காண ரம்மியமாக காட்சியளித்தது.

x