மயானத்தில் உடல்களை எரியூட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் @ புதுக்கோட்டை


மாத்தூர் மயானத்தில் உடலை எரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் மயானத்தில் உடல்களை எரியூட்டும் பணி செய்து வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கே.அருணாசலம்(54). 3-ம் வகுப்பு வரை படித்துள்ளஇவருக்கு மனைவி, 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மகன் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்.

அருணாசலம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூலி வேலைக்கு செல்வது, பறை உள்ளிட்ட இசைக் கருவிகளை வாசிப்பது, மயானத்தில் உடல்களை எரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். ஊராட்சி மன்றத் தலைவரான பிறகும் இவர் இதே பணிகளை செய்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம் கூறியது: "எனது உழைப்பை நம்பி கூலி வேலைக்கு யார் அழைத்தாலும், எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்வேன். இசைக் கருவிகளை வாசிப்பது கைவந்த கலை. ட்ரம்ஸ், தவில், நாகசுரம், கொட்டு உள்ளிட்ட இசைக்கருவிகள் வீட்டில் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது மனைவியின் நகையை அடகு வைத்து ரூ.35 ஆயிரம் செலவு செய்தேன்.

பதவிக்கு வந்த பிறகும் தொழிலை கைவிடாமல் உடல்களை எரிப்பதுடன், பறையும் இசைத்து வருகிறேன். உடலை எரிப்பதற்கு தொடக்கத்தில் ரூ.100 வீதம் கொடுத்தார்கள். படிப்படியாக உயர்ந்து, தற்போது, ரூ.1,500 கொடுக்கிறார்கள். வசதி இல்லாதவர்களிடம் அதையும் வாங்க மாட்டேன். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல், தொடர்ந்து இந்த வேலையை செய்வேன்.

பகலில் அலுவலகத்தில் இருந்து தலைவர் பணி செய்வேன். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும். ஆனால், போதுமான நிதி இல்லாததால் உடனுக்குடன் செய்ய முடியவில்லை. மழைக்காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க மாத்துக் குளம் கண்மாய் தூர் வாருதல், சாலை, பாலம் அமைத்தல் போன்ற நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறாமல் உள்ளன.

மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றால் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன். இதுவரை எந்த வேலைக்கும் கமிஷன் வாங்கியதில்லை. பதவி இல்லாவிட்டாலும் எனது பணி தொடரும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில்தான் குடியிருந்து வருகிறேன்" இவ்வாறு அருணாசலம் கூறினார்.

மனிதநேய மிக்க பணியில் ஈடுபட்டு வரும் அருணாசலத்தை, அரசு கவுரவிப்பது அவரது சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரமாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

x