‘நானென்ன கண்காட்சிக்கான விலங்கா?’


சதா தன்னை பின் தொடரும் கேமராக்கள் குறித்து ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நடிகை தாப்ஸி, ”நானென்ன கண்காட்சிக்கான விலங்கா?” என்று சீறியிருக்கிறார்.

பிரபல்யத்துக்காக தங்களது சகல நகர்வுகளையும், படங்கள் மற்றும் வீடியோக்களாக பொதுவெளியில் வலிய பரப்பும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் தாப்ஸியின் குரல் தனித்து ஒலிக்கிறது.

”நான் ஒரு நடிகை. படப்பிடிப்புக்கு வந்தால் கேமரா முன்பாக பணியாற்றுவது என்னுடைய கடமை. அதற்காக வீட்டைவிட்டு வெளிவந்தாலே கேமராக்கள் துரத்துவது எரிச்சலூட்டுகிறது” என்று ஒரு பேட்டியில் நடிகை தாப்ஸி அதிருப்தி தெரிவித்திருப்பது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. ஊடகங்கள் என்ற பெயரில் புற்றீசலாக பெருகியிருக்கும் யூட்யூப் சேனல்கள், பொது இடங்களில் நடிகர் நடிகையரிடம் அத்துமீறுவது அதிகரித்து வருகிறது. மரபான மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் பின்பற்றும் ஒழுங்குகள் எதையும் அவை கைகொள்வதில்லை.

இந்த சேனல்களுக்கு அப்பால் ரசிகர்கள் என்ற பெயரிலும் பலர் பொதுவெளியில் சினிமா நட்சத்திரங்களை ஈயாக மொய்க்க ஆரம்பித்து விடுகின்றனர். செல்ஃபி என்ற பெயரில் அவஸ்தைக்கு உள்ளாக்குகின்றனர். அப்படியான ரசிகர்களின் அத்துமீறல்களின்போது கேமராக்களை தட்டிவிட்ட நட்சத்திரங்களின் கோபத்தையும் பார்த்திருக்கிறோம். தற்போதைய தாப்ஸியின் சீற்றம், ஒரு நடிகை என்பதற்கு அப்பால் ஒரு பெண்ணாக அவர் கோரும் சுதந்திரம் பற்றியது.

”பொது இடங்களில் பாதுகாவலர்கள் இன்றி நடமாட விரும்புகிறேன். தயவுசெய்து எனது சுதந்திரத்தையும் மதியுங்கள். ஆனால் அதற்கு வாய்ப்பின்றி கேமராக்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், பின்னர் நான் நியமிக்கும் பாதுகாவலர்களால் அந்த கேமராக்களுக்கு பாதிப்பு ஏற்படும்..” என்றும் தாப்ஸி கோபம் பகிர்ந்திருக்கிறார். அண்மையில் தாப்ஸி பயணித்த காரின் கண்ணாடியில் கேமராவை வைத்து, அவர் அறியாது தாப்ஸியை படம்பிடிக்க முயன்றவர்களால் அவர் கடும் சீற்றத்துக்கு ஆளானார்.

”நாங்கள் நடிகையாக இருந்தாலும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கேமராக்களுடன் அத்துமீறுவது முறையல்ல. படப்பிடிப்புக்கு அப்பால் கேமராக்களை வெறுக்கிறேன். கண்காட்சிக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளா நாங்கள்?” என்று தாப்ஸி எழுப்பியிருக்கும் கேள்விக்கு விமர்சனங்களும் அதிகரித்திருக்கின்றன.

பாலிவுட்டின் ஜான்வி கபூர் போன்ற பல நடிகைகள், தங்களது ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்து பொதுவெளியில் பரப்புவதற்கு என்றே தனிக்குழுவை நியமித்துள்ளனர். மேலும் காட்சிப் பொருளாகவும், சில தருணங்களில் ஏடாகூடமாகவும் வெளியாகும் பதிவுகளையும் இந்த நடிகையர் கண்டுகொள்வதில்லை. ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்தால் மட்டுமே, மார்க்கெட்டில் நிலைத்திருக்க முடியும் என்பது அவர்களின் கணக்கு. அப்படியானவர்கள் மத்தியில் தாப்ஸியின் குரல் தனித்து ஒலிக்கிறது.

தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமானபோது ‘வெள்ளாவியில் வெளுத்த’ அழகாக தன்னை காட்சிப்பொருளாக்க அனுமதித்தவர், பாலிவுட் போனதும் பத்தாண்டு அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கிறார். பெண்மையக் கதைகளுக்கு முக்கியத்துவம் குடுத்தே அதிகம் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பொதுவெளியிலும், பெண்ணுரிமை மற்றும் மனித உரிமைக்காக உரக்க குரல் கொடுத்து வருகிறார்.

அவரது சர்ச்சைக்குரிய சில கருத்துக்களால் தாப்ஸிக்கு எதிரான விமர்சினங்களும் அதிகரித்துள்ளன. தற்போதைய தாப்ஸியின் ஆட்சேபக் குரலையும்கூட, கடந்த வாரம் தாப்ஸியின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘பிளர்ர்’ திரைப்படத்துக்காக அவர் வலிய செய்திருப்பதாகவும் தாப்ஸி எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

x