பாஸ்போர்டில் ஒற்றை வார்த்தையில் பெயரா?: இந்தியர்களின் அமீரக பயணத்தில் இடைஞ்சல்


தங்கள் பெயரை ஒற்றை வார்த்தையில் பாஸ்போர்டில் பதிந்திருக்கும் இந்திய பயணிகளுக்கு அமீரகம் தடைவிதித்திருக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகளின் குடியேற்றத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான சேவை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இதன்படி பாஸ்போர்டில் தங்கள் பெயரை ஒற்றை வார்த்தையில் கொண்டவர்களுக்கு அமீரகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது பெயரின் பின்னொட்டாக தந்தை, சமூகம் மற்றும் குடும்ப பெயர்களை கொண்டவர்கள் தப்பித்தார்கள். அவ்வாறின்றி ஒற்றை பெயரை பாஸ்போர்டில் பொறித்திருக்கும் இந்திய பயணிகளை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் இந்த புதிய சுற்றறிக்கை குறித்து இந்திய விமான சேவையாளர்கள் தங்கள் இணையதள பக்கத்தில் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர். அமீரக பயணத்துக்கு திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக தங்களது பயண ஏற்ப்பாட்டாளர்களை அணுகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை பொறுத்தவரை வட மாநிலங்களில் தாம் சார்ந்த சமூகத்தின் பெயரை பின்னொட்டாக சேர்ப்பது இயல்பு வழக்கில் உள்ளது. தென்னிந்தியாவின் கேரளத்திலும் இம்முறை புழங்கி வருகிறது. தமிழகத்தில் சாதி எதிர்ப்புக்கான அடையாளங்களில் ஒன்றாக இந்த சாதி பின்னொட்டு பெருமளவில் ஒழிந்துள்ளது. அவர்களிலும் பெற்றோர் அல்லது குடும்ப பெயர்களை பின்னொட்டாக தரித்தவர்கள், அமீரகத்தின் புதிய தடையிலிருந்து விடுபடலாம்.

இந்த உத்தரவு நவ.21 முதல் அமலுக்கு வந்துள்ளதாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பார்வை, பயணம், வேலை என எதன் அடிப்படையில் விசா பெற்றிருப்பினும் அவர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும். அமீரகத்தில் குடியுரிமை பெற்றவர்கள் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். புதிதாக பயணிப்பவர்களுக்கு தடை என்பதுடன், அவ்வாறு ஏற்கனவே பயணித்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் புதிய முடிவுக்கு பின்னே அவர்களின் பாதுகாப்பு சார்ந்த புதிய ஏற்பாடுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

x