‘அப்பப்பா.. இப்படியும் ஒரு அப்பா’: பச்சிளம் பாப்பாவுக்காக பல லட்சம் ஊதியம் தரும் பதவியை உதறினார்


கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பெரும் ஊதியம் தரும் பதவியை, இளம் அப்பா ஒருவர் பச்சிளம் மகளுக்காக உதறியிருக்கிறார். நிறுவனத்துக்கான பணி துறப்பு கடிதத்தில் தான் அப்பாவாக புரமோஷன் அடைந்திருப்பதை காரணமாக காட்டியுள்ளார்.

அங்கிட் ஜோஷி காரக்பூர் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் எம்.டெக்., முடித்தவர். இளம் வயதிலேயே பல்வேறு பெரும் நிறுவனங்களில் பணியாற்றி அதன் உச்சமாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் பதவியை பிடித்தார். அவரது கனவு பணியிடம் அது. ஆனபோதும் அண்மையில் அந்த பதவியை அங்கிட் ஜோஷி ராஜினாமா செய்துவிட்டார்.

அங்கிட் ஜோஷி

அங்கிட் ஜோஷி - அகன்ஷா இருவரும் காதல் தம்பதியினர். தேனிலவுக்காக இமாச்சல் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியில் தங்கியிருந்தனர். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஸ்பிதியின் பெயரை சூட்டுவது என அங்கே முடிவும் செய்தனர். அப்படி முதல் குழந்தைக்காக அகன்ஷா சூலுற்றபோது, அங்கிட் ஜோஷி பல சங்கடங்களை சந்தித்தார். தேசம் நெடுக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிய பதவி அவருடையது. அதில் தம்பதியரில் இருவருக்குமே அதுவரை பிரச்சினை இல்லை. ஆனால் பிறக்கப்போகும் ’ஸ்பிதி’க்கு தந்தையின் அண்மை அவசியமென ஏங்கினார்கள். அப்படியே அங்கிட்டின் அலுவலகத்திலும் பிரச்சினை வந்தது.

மகப்பேறு விடுமுறையாக தாய்க்கு பல மாதங்கள் விடுப்பு தரும் அலுவலகங்கள், தந்தையை மட்டும் ஒருசில நாட்களோடு பணியில் சேருமாறு வற்புறுத்துகின்றன. அங்கிட்டுக்கும் அப்படியொரு நெருக்கடி நேர்ந்தது. ஒரு வார காலத்துக்கு மேல் தந்தைக்கான விடுமுறை கிடையாது என்றது நிர்வாகம். அந்த கணத்தில் வேலையை விடுவதென முடிவெடுத்தார் அங்கிட். நண்பர்களும், உறவினர்களும் அங்கிட்டை திட்டித் தீர்த்தார்கள். மாதத்துக்கு பல லட்சங்களை ஊதியமாகம், சில லட்சங்களை சலுகைகளாகவும் வாரி வழங்கும் உயர் பதவியை விடப்போகிறேன் என்றால் அங்கிட்டுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்றே அவர்கள் அதிருப்தி காட்டினார்கள்.

ஆனால் அங்கிட் உறுதியாக இருந்தார். பிறக்கப்போகும் ஸ்பிதி -அது ஆணோ பெண்ணோ- பச்சிளம் குழந்தைக்கு தாயின் அண்மை எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு தந்தையும் முக்கியம் என கருதினார். நிறுவனத்துக்கு அனுப்பிய பணி துறப்பு மடலில் ‘தான் தந்தையாக பதவி உயர்வு பெறுவதை’ காரணமாக்கி இருந்தார். கணவரின் அரவணைப்பில் அகன்ஷா அழகான ஸ்பிதியை பெற்றெடுத்தாள். அந்த பெண் மகவு தற்போது தாயைவிட தந்தையின் கரங்களில் அதிகம் கதகதப்பு கண்டு வருகிறாள்.

இந்த அப்பப்பா.. அப்பா அங்கிட்டின் புராணம், சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு அதிகம் சிலாகிக்கப்பட்டு வருகிறது. மகளை உச்சிமுகரும் இந்த தந்தையின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விருப்பங்களை பெற்றிருக்கிறது. கூடவே குழந்தை பேறு என்பதை முன்வைத்து, மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான விடுமுறை தந்தைக்கும் வேண்டும் என்ற குரல்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன.

x