உடற்பயிற்சியின்போது உயிரை பறித்தது மாரடைப்பு: புனித் ராஜ்குமார் பாணியில் பலியான நடிகர்


ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு தாக்கியதில் இந்தி நடிகரான சித்தாந்த் வீர் சூர்யவன்சி என்பவர் இன்று(நவ.11) மரணம் அடைந்துள்ளார். புனித் ராஜ்குமார் போலவே ஜிம்மில் மாரடைப்பு தாக்கி இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து கட்டுமஸ்தான உடல் மோகத்துக்கும், முறையற்ற உடற்பயிற்சிக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஓராண்டு முன்னதாக(2021, அக்.29) கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்மில் மாரடைப்பு கண்டு இறந்த பின்னரே, மிதமிஞ்சிய உடற்பயிற்சிக்கு எதிரான விழிப்புணர்வு பொதுவெளியில் அதிகரித்தது. அப்படியும் பாலிவுட் காமெடி நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் உடற்பயிற்சி கூடங்களில் மாரடைப்பு கண்டு பரிதாபமாக இறந்தனர்.

இன்று பலியான நடிகர் சிந்தாந்தும் புனித் ராஜ்குமார் போலவே 46 வயதில் மாரடைப்பு கண்டிருக்கிறார். குஷும், வாரிஸ், சூர்யபுத்ர கர்ன் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள சித்தாந்துக்கு அலிசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

சித்தாந்த்

நடிகர் சித்தாந்தின் மறைவுக்கு அதிர்ச்சி மற்றும் இரங்கல் தெரிவித்து வரும் பலரும், அதீத உடற்பயிற்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன்னுடைய பதிவில் ’இது போன்ற துயரங்களுக்கு முடிவு கட்டியாக வேண்டும். மருத்துவ ஆலோசனை மற்றும் விற்பன்னரின் வழிகாட்டுதல் இன்றி அதீதமாய் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், ஜிம்மில் பழியாய் கிடப்பதும் முட்டாள்தனமானது. உடனடியாக இந்த போக்கினை சரி செய்தாக வேண்டும். அதற்கு சமூகம் ஒருமனதாக முன்வரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே போன்று ஆண் பெண் இருபாலரும் கட்டழகின் பெயரில் பித்தான காரியங்களில் ஈடுபட்டு வருவதும், பட்டினி கிடப்பது, வீரிய புரோட்டின் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவை குறித்தும் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் மத்தியிலிருந்த இந்த கட்டழகு மீதான மையல், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் சாமானியரையும் தற்போது பிடித்தாட்டுகிறது.

உடற்பயிற்சியின்போது மாரடைப்பில் இறந்த பிரபலங்கள்

முறையான உணவு, ஓய்வு, உறக்கம் ஆகியவற்றோடு பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது ஜிம் மாரடைப்பு போன்ற ஆபத்துக்களை தவிர்க்க உதவும். 35 வயதுக்கு மேலானோர் வருடந்தோறும் முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது, புகை, மது ஆகியவற்றுடன் துரித ரகங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ரசாயன உணவுகளை தவிர்ப்பதும் உடலோம்பலுக்கு உதவும்.

x