வயதில் செஞ்சுரி அடித்த இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா?


’இந்தியாவில் சுமார் இரண்டரை லட்சம் பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள்’ என்று தெரிவித்திருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளில் இன்று(நவ.9) பங்கேற்ற ராஜிவ் குமார் சில சுவாரசிய தகவல்களை தெரிவித்தார். அவற்றில் ஒன்றாக ’இந்தியாவில் 2.49 லட்சம் வாக்களார்கள் 100 வயதை கடந்தவர்களாகவும், சுமார் 1.80 கோடி வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்களாகவும் உள்ளனர்’ என்றார். ஆனபோதும் தங்களது வயோதிகம் தொடர்பான சிரமங்களை பாராத இவர்கள் தேர்தலன்று வாக்களிப்பதில் ஆர்வமாக பங்கேற்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் வாக்காளரான அண்மையில் மறைந்த ஷ்யாம் சரண் நேகியை நினைவுகூர்ந்த தலைமை தேர்தல் ஆணையர், ‘106 வயது ஷ்யாம் சரண் தனது மறைவுக்கு 3 நாள் முன்பாக, தபால் வாயிலாக தனது வாக்குரிமையை பதிவு செய்திருக்கிறார்’ என்று மெச்சினார். இளைய சமுதாயத்தினர் மத்தியில் வாக்களிப்பதில் சுணக்கம் இருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ‘சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முனைப்பு காட்டும் இளையோர், வாக்களிப்பதன் மூலமாகவும் தங்களது கருத்தையும் கடமையையும் பதிவு செய்ய முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

ஓராண்டு இடைவெளியில் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவான 2024-மக்களவைத் தேர்தலுக்கு தேசம் தயாராகி வருகிறது. வாக்களர்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதன் மூலமே மக்களாட்சி என்பதற்கு பொருள் சேரும். இந்த வகையில் வாக்களர் பட்டியலில் வயது வந்தோரை இணைப்பது தொடர்பான விழிப்புணர்வு பணிகளை நாடு நெடுக தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

x