‘உயிரற்ற புனிதமா பெண்?’: உமாதேவியின் புதுமை பாடலை வெளியிட்டார் கனிமொழி


’அனல் மேலே பனித்துளி’ திரைப்படத்துக்காக உமாதேவி எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையில் ஆன்ட்ரியா பாடிய ’எது நான் இங்கே?’ என்ற பாடலை வெளியிட்டார் மக்களவை உறுப்பினர் கனிமொழி.

இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் எழுதி இயக்க, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’. சில தினங்கள் முன்பாக இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சூழலில், படத்தில் இடம்பெற்ற பிரதான பாடல் ஒன்றை மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

கவிஞர் உமாதேவியின் முற்போக்கு வரிகள் அடங்கிய இந்த பாடல் வெளியீட்டை முன்னிட்டு தனது கருத்தையும் கனிமொழி பதிவிட்டிருந்தார். அதில் ‘பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக, பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாக இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப்பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார். யூட்யூபில் காணக்கிடைக்கும் ’எது நான் இங்கே’ பாடல் குறித்து பலரும் பாஸிடிவ் மறுமொழிகளை பகிர்ந்து வருகின்றனர்.

’மானம் என்பது பெண் உடுத்தும் உடையில் இல்லை; அவள் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது’ என்பதே அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் அடிநாதம். நேரடி ஓடிடி வெளியீடாக ’சோனிலிவ்’ தளத்தில் நவம்பர் 18 அன்று அனல் மேலே பனித்துளி திரைப்படம் வெளியாக உள்ளது.

x