இலக்கியத்துக்கான நோபல் விருதாளர்: யார் இந்த ஆன்னி எர்னாக்ஸ்?


ஆன்னி எர்னாக்ஸ்

இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. யார் இவர்?

இலக்கியத்துக்கான நோபல் விருது 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை 119 பேர் இந்த விருதை வென்றிருக்கிறார்கள். அவர்களில் 17-வது பெண் எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸ். இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு மிகவும் தகுதியானவர் என இலக்கிய வட்டாரத்தில் பேசப்படுபவர் இவர். ‘இந்த ஆண்டு எர்னாக்ஸுக்குத்தான் விருது’ என்று பல முறை எதிர்பார்ப்புக்குள்ளானவரும்கூட.

82 வயதாகும் ஆன்னி எர்னாக்ஸ், வர்க்கம், பாலினம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு எளிமையான நடையில் புனையப்பட்ட நாவல்களுக்குச் சொந்தக்காரர். பெரும்பாலும் தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே படைப்புகளை உருவாக்கினார்.

பிரான்ஸின் நோர்மண்டி பிராந்தியத்தில் உள்ள வெட்டோட் நகரைச் சேர்ந்தவர் ஆன்னி எர்னாக். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் ஒருகட்டத்தில் மளிகைக் கடையும் நடத்தினர். ரூவன், போர்டோ பல்கலைக்கழகங்களில் பயின்றார். கல்லூரி ஆசிரியையாகப் பணியைத் தொடங்கினார்.

1974-ல் Les Armoires vides எனும் அவரது முதல் பிரெஞ்சு நாவல் வெளியானது. அதற்கு ‘துடைத்தகற்றப்பட்டது’ என்று அர்த்தம். 1984-ல் அவர் எழுதிய La Place எனும் நாவல் ரெனோடாட் விருதை அவருக்குப் பெற்றுத் தந்தது. அந்தத் தலைப்பின் அர்த்தம் ‘ஒரு மனிதனின் இடம்’. அந்த நாவலும் அவரது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். அவரது பல நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

’எ வுமன்ஸ் ஸ்டோரி’, ‘எ மேன்ஸ் ப்ளேஸ், ‘சிம்பிள் பேஷன்’ உள்ளிட்ட நாவல்கள் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றுத்தந்தன. எழுத்து என்பதே அரசியல் செயல்பாடுதான் எனும் கொள்கை கொண்ட எர்னாக்ஸ், தனது படைப்புகள் மூலம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வையை உருவாக்க வேண்டும் எனும் லட்சியத்துடன் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

x