தூத்துக்குடி | ஜெல்லி மீன்களால் அச்சுறுத்தல் இல்லை: மீன்வளத் துறை ஆய்வாளர் தகவல்


பிரதிநிதித்துவப் படம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காணப்படும் ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுக்குகின்றன. கடலில் நீராடும் பக்தர்களை கடிப்பதாலோ அல்லது தொடுவதாலோ அலர்ஜி ஏற்பட்டு ஊறல் ஏற்படுகிறது. சில பக்தர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இதுகுறித்து, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷபனம், ஆய்வாளர் சுப்பிரமணியன், பணியாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரையில் ஆய்வு செய்தனர்.

ஆய்வாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செஞ்சொறி மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அதிகம் காணப்படும். இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். ஆகையால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடக் கூடாது.

அவற்றை அறியாமல் தொடுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் தீக்காயம் போல் ஏற்பட்ட காந்தலை குறைக்க, காயம் ஏற்பட்ட பகுதியில் வினிகரை தெளித்து குணம் பெறலாம். பின்னர், கேலமைன் அல்லது கேலடிரில் மருந்தை பயன்படுத்தினால், 24 மணி நேரத்துக்குள் காயம் சரியாகி விடும். இந்த வகை மீன்களால் பெரிய அச்சுறுத்தல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x