வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு @ சென்னை 


சென்னை: சென்னையில் நடைபெறும் வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 23 -ம் தேதி (வியாழக்கிழமை) ஜாம் தயாரித்தல் பயிற்சி வகுப்பும், 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டு சுகாதார உபயோகப்பொருட்களை தயாரிப்பது குறித்தும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி ஜாம் வகைகள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில், மிக்ஸ்டு ஜாம், அண்ணாச்சி பழம் ஜாம், மேங்கோ ஜாம், பலாப்பழ ஜாம், கேரட் ஜாம், பீட்ரூட் ஜாம் மற்றும் தேங்காய் ஜாம் ஆகியவற்றை தயாரிக்க செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

அதேபோல வீட்டு சுகாதார உபயோகப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியில் சொட்டு நீலம், பாத்திரம் துலக்கும் தூள் (சபீனா), துணி துவைக்கும் தூள், வெள்ளை பினாயில், கொசு விரட்டி (மூலிகை), செயற்கை வினிகர், விம் ஜெல் உள்ளிட்டவைகளைத் தயாரிப்பது பற்றி செய்முறை பயிற்சி வழங்கப்படும்.

இந்த பயிற்சிகளை இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044 - 29530048 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.