நெல் சாகுபடி பரப்பு குறைந்தது - உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி!


பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உடைத்த அரிசியின் ஏற்றுமதி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு, ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகில் அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2021 - 22 ம் ஆண்டில் இந்தியா 21.1 டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த சூழலில் அதிக மழை மற்றும் வறட்சி காரணமாக நடப்பு காரீஃப் பருவத்தில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க, பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, உமியில் உள்ள அரிசி மற்றும் உமி பழுப்பு அரிசிக்கும் 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சந்தைகளில் அரிசியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 26 கிலோ அரிசி மூட்டையின் விலை பை ஒன்றுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை கடந்த சில மாதங்களில் உயர்ந்துள்ளது என வணிகர்கள் தெரிவிக்கின்றனர். கையிருப்பு குறைந்த காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

x