கர்நாடகத்தில் கனமழை; காவிரியில் கடும் வெள்ளம்: தமிழகத்தில் வெள்ள அபாயம்


கர்நாடகத்தில் மீண்டும் பெய்யத் தொடங்கியிருக்கும் கனமழையால் அம்மாநிலத்தின் அணைகள் முழுமையாக நிரம்பி, காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மிக அதிக அளவு தண்ணீர் காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு இருப்பதால் தமிழகம் மீண்டும் வெள்ள அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி அதன் மூலம் தமிழகத்திற்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கடந்த மாதம் இரண்டாவது வாரத்திலேயே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனால் காவிரியில் வந்த நீர் முழுவதும் அப்படியே திறக்கப்பட்டது. அது கொள்ளிடம் ஆறு வழியாகக் கடலுக்கு அனுப்பப்பட்டது. வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு கடலில் கலந்து வீணானது.

இரண்டாவது முறையாக இந்த மாத ஆரம்பத்தில் மீண்டும் மேட்டூருக்கு அதிக அளவு நீர்வரத்து வந்தது. அதனால் அவை முழுவதுமாகக் காவிரியில் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் வழியாகக் கடலுக்கு அனுப்பப்பட்டது. அப்படி இரண்டு முறை கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளம் வந்ததால் கொள்ளிடத்தில் கரையோரம் உள்ள பல கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். விவசாயமும் பாதிப்படைந்தது.

இந்த நிலையில் மீண்டும் தற்போது மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தண்ணீர் முழுவதுமாகக் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து 95,000 கன அடி நீர் வெளியேற்றப் பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவோடு இருப்பதால் அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மேலும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நீர் முழுவதும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படும் என்பதால் காவேரி கரையோரம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

x