‘எனக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்தான் தெரியும்!’


அதிகாலையில் தூக்கம் கலைந்ததால், ஓடிடி-யில் தமிழ்ப் படம் ஒன்றைப் பார்த்துத் தொலைத்த பாச்சா, தாங்க முடியாத தலைவலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தான். கரோனா காலம் முதல் பயன்படுத்திவந்த டோலோ 650 கைவசம் இருந்தாலும், லஞ்சப் புகாரில் சிக்கிய கம்பெனியின் மாத்திரையைப் போடுவதா, தலைவலியுடனேயே வலம் வருவதா எனும் குழப்பம், தனுஷை விரட்டிய தியேட்டர் கூட்டம் போல பாச்சாவை விரட்டிக்கொண்டிருந்தது. அதைக் கவனித்த பறக்கும் பைக், “என்னய்யா நீ! இதைவிட பெரிய தலைவலியையெல்லாம் தாங்கிக்கிட்டு தலைவர்களெல்லாம் தளராம ஓடிக்கிட்டு இருக்காங்க. சமூகவிரோதிகள்லாம் சங்கடம் பார்க்காம ‘கடமை’யைச் செஞ்சிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா...” என்று சலித்துக்கொண்டது.

பைக்கின் பரிகாசத்தை வைத்து பட்டியலில் முதலாமவர் யார் என்று முடிவுசெய்துகொண்டான் பாச்சா.

போயஸ் கார்டன். ரஜினி இல்லம்.

தரிசனத்துக்குக் காத்திருந்து ‘தலைவா’ கோஷம் போட ரசிகர்கள் யாரும் இல்லை. ‘கேட்’டுக்கு வெளியே நடக்கும் பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கத் தயாராக சில பல ஊடகவியலாளர்கள் காத்திருந்தனர். ஆனாலும், போயஸ் கார்டனே பொது தியானத்தில் ஆழ்ந்தது போல ஆழ்ந்த அமைதி அங்கு நிலவியது. அப்போது, கேட்டுக்கு உள்ளே ரஜினி யாருடனோ போனில் பேசும் சத்தம் கேட்டது.

“போன படத்துல ரசிகர்கள் கிளைமாக்ஸ் வரைக்கும் தூங்கிட்டு, படம் முடிஞ்சதும் கீர்த்தி சுரேஷுக்குக் கைதட்டிட்டு இருந்தாங்க. இந்த தடவை அப்படி ஆகிடக்கூடாது. அனிருத் கிட்ட சொல்லிவைங்க. அவர் இன்டர்வெல் சமயத்துல கூட அதிரவைக்கிற மியூசிக் போட்டு தியேட்டர்ல யாரும் தூங்காம பார்த்துக்குவார்” என்று நெல்சனிடம் நீளமாகக் கண்டிஷன் போட்டுக்கொண்டிருந்தார் சூப்பர் ஸ்டார்.

பட்டென கேட்டைத் திறந்துகொண்டு அவர் முன் ஆஜரான பாச்சா, “அப்படீன்னா நீங்க ரஹ்மானையே மியூசிக் போட வச்சிருக்கலாமே! அவர் சிவமணி ட்ரம்ஸை வச்சு அண்டம் அதிர மியூசிக் போட்டிருப்பாரே. ‘பொன்னியின் செல்வன்’ சிங்கிள்ஸ் கேட்ட அங்கிள்ஸ் அதானே சொல்றாங்க” என்றான்.

சட்டென (போன்) காலைக் கட் செய்த ரஜினி, “உன்னை யாருப்பா உள்ளே விட்டது? நீ ஷமூக விரோதியா? எனக்குத் தலையே சுத்துது” என்றார்.

“அதை க்ளாரிஃபை பண்ணத்தான் சார் வந்தேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தப்ப ‘ஷமூக விரோதிகள்தான் போலீஸை அடிச்சாங்க... அதனாலதான் சுட்டாங்க’ன்னு பிரஸ் மீட்ல பிரஷ்ஷர் குக்கர் மாதிரி கொந்தளிச்சீங்களே... இப்ப ஆணையத்தோட ரிப்போர்ட்ல என்ன வந்திருக்குன்னு பார்த்தீங்களா?” என்றான் பாச்சா.

“ஆணையத்தோட ரிப்போர்ட்டா? எனக்குத் தெரியாதே! எனக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்தான் தெரியும். லாஸ்ட் ரெண்டு மூணு படமா அதையும் நான் படிக்கிறதில்லை” என்று வெண் தாடியை மென்மையாக வருடிக்கொண்டார் ரஜினி.

“சும்மா ஒண்ணும் சுடலைன்னு நீங்க சொன்னாலும் ‘சுடலை’ங்கிற போலீஸ்காரர் 17 ரவுண்டு சுட்டிருக்கிறதா அறிக்கை சொல்லுது சார். நீங்கதான் இந்த விஷயத்துல ‘எதார்த்தமா’ கருத்து சொன்னதா எழுத்துபூர்வமா சொல்லிட்டீங்களே…” என்ற பாச்சா, “சரி அதை விடுங்க. இப்பெல்லாம் பாஜககாரங்க உங்களைப் பக்கத்துலேயே சேர்த்துக்க மாட்டேங்கிறாங்களாமே?! படம் ரெடியாகும் சமயத்துல பப்ளிசிட்டிக்காக பாலிடிக்ஸ் பேசுறதா உங்க மேல படு கடுப்புல இருக்கிறதா சொல்றாங்க?!” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“கண்ணா! ஆளுநரைப் பார்த்து அரசியல் பேசுனப்போ, ஆன்மிக பூமியில வசிக்கிற தமிழர்களை ஆன்மாவுக்கு இணையா நேசிக்கிறதா சொன்னார். அதை பிரஸ் மீட்ல ஃபீல் பண்ணிச் சொன்னா... ஃபிலிம் ஷூட்டிங் பத்தி கேள்வி கேட்கிறாங்க பிரஸ் பீப்பிள். அதனாலதான் யாருக்கும் பேட்டி கொடுக்காம கேட்டை அடைச்சு வச்சிருந்தேன். நீ கேட்டைத் திறந்துட்டு வந்து சேட்டை பண்ற” என்று சூடான சூப்பர் ஸ்டார், கூடவே, “கான்ஸ்டபிள்ஸ்!” என்று சவுண்டு விட, “சார், செக்யூரிட்டியைக் கூப்பிடுறதுக்குப் பதிலா கான்ஸ்டபிள்ஸைக் கூப்பிடுறீங்க. ‘ஜெயிலர்’ ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள கேரக்டராவே செட் ஆகிட்டீங்க போல. இந்தப் படமாவது ஓடட்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான் பாச்சா.

“அடுத்தவர் சீமான்” என்று பாச்சா சொன்னதும், “அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே... மடக்குற மாதிரி கேள்வி கேட்டா மானாங்கன்னியா கோபப்பட்டு மண்டயை உடைச்சிடுறதா மிரட்டுவாரே... எதுக்கும் ஹெவியான ஹெல்மெட் போட்டுக்கிட்டு போப்பா” என்று பாசத்துடன் சொன்னது பறக்கும் பைக்.

வழக்கமாக டிவி சேனல்களுக்கும் சோஷியல் மீடியாவுக்கும் டிசைன் டிசைனாக கன்டென்ட் தரும் சீமான், அன்று அமைதியாக அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்நேரம் பார்த்து, ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என விளம்பரம் ஒன்று வர... வெகுண்டெழுந்த சீமான், டிவி மீது கோபமாகி ரிமோட்டை விட்டெறிந்தார். “இதுக்குத்தான்யா நான் டிவியெல்லாம் பார்க்கிறதில்லை. என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம்” என்று எகிறினார்.

அப்போது அங்கு வந்த தம்பி ஒருவர், “அண்ணே! உங்களுக்காக அமெரிக்கவுல இருந்து ஒரு சட்டை பார்சல் அனுப்பியிருக்கார்ணே... தம்பி தடுமாறன்” என்று சொல்ல, “அதை வாங்கி அடுத்த ரூம்ல வை. நான் ட்ரையல் பார்க்கணும்” என்று சிரித்த முகத்துடன் சொன்ன சீமான், சிச்சுவேஷனுக்கு மீண்டும் திரும்பியதும் சீரியஸானார். “என் கையில இந்த நிலம் சிக்குச்சு... இலவசம்ங்கிற வார்த்தையே அகராதியில இருந்து அகற்றிடுவேன்” என்று ஹை டெசிபலில் அவர் சொல்லவும், ஹெல்மெட் சகிதம் பாச்சா அங்கு ஆஜராகவும் சரியாக இருந்தது.

“அதெப்படி சார்? ‘சட்டையே ஒண்ணு போல இல்லை. சாப்பாடும் ஒண்ணு போல இல்லை... அப்புறம் எப்படி சம்பந்தமாகும்’னு பாஜககாரங்க கிட்ட இருந்து பத்தடி தள்ளி நிக்கிறீங்க. ஆனா, அவங்க பேசுற கருத்தை அடி மாறாம அப்படியே சொல்றீங்களே?” என்றான் பாச்சா.

அவனை மேலும் கீழும் ஆவேசத்துடன் பார்த்த சீமான், “தலைக்கவசம் அணிஞ்சிட்டு வந்தா தாறுமாறா கேள்வி கேப்பியாப்பா நீ? கன்னாபின்னான்னு கேள்வி கேட்டா காலை உடைச்சிடுவேன் பார்த்துக்க” என்று பாச்சாவைப் பதறவைத்தார்.

பின்னர் பேச்சைத் தொடர்ந்தவர், “இலவசமா ஓட்டே போடாதவங்க நாடுப்பா இது. இதை மாத்தத்தான் பிரயாசைப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா, இலவசம் வேணாம்னு மோடி சொல்றதை நாங்க ஏத்துக்க மாட்டோம். எந்தக் கருத்தா இருந்தாலும் அதை நாங்கதான் சொல்வோம். மோடி சொன்னதைக் கேட்காம முகப்புத்தகத்துல டிபி மாத்தாம பாஜககாரங்களுக்கு பிபி-யை ஏத்துன ஆளுய்யா நானு... என்னை பாஜகவோட சேர்த்துப் பேசுற துணிச்சல் எங்கிருந்து வந்துச்சு உனக்கு?” என்று ஏகக் கோபம் காட்டினார் சீமான்.

“சரி விடுங்க. தொடர்ந்து தோல்விகளைச் சந்திச்சாலும் கூட்டணிங்கிற பேச்சே கிடையாதுன்னு கூலா சொல்றீங்களே... எலெக்‌ஷனுக்கு எலெக்‌ஷன் எப்படி சார் கலெக்‌ஷன் ஆகுது?” என்று பாச்சா கேட்க, சீமான் சீட்டைவிட்டு சீறிக்கொண்டு எழ... நேர்காணல் நிறைவடைந்தது.

திரும்பும்வழியில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் சீனக் கப்பல் மாதிரி உளவு பார்த்து வீடியோ போட்டது பறக்கும் பைக்.

‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்... இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்’ எனும் பாடலைக் கேட்டபடி ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் ஓபிஎஸ்.

‘நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா?’ எனும் பாடலை ஒலிக்கவிட்டபடி நிம்மதி இழந்தவராகக் காணப்பட்டார் ஈபிஎஸ்.

பைக் பாச்சாவைச் சுமந்தபடி பறக்கத் தொடங்கியது!

x