திருப்பூரில் பேருந்து நிலையங்களில் சுற்றித்திரிந்த முதியவர்கள் மீட்பு


திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தவர்களை மீட்டு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்தவர்களையும், மனநலம்பாதித்த நபர்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீஸார் ஈடுபட்டனர்.

20-க்கும் மேற்பட்ட முதியவர்கள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டது. அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்த முதியவர்கள், வாகனத்தில் ஏற மறுத்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வாகனத்தில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அனைவரும் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு, புகழகம் பெருமாள் வீதி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி இரவு நேர தங்கும் விடுதிகளில் சேர்க்கப்பட்டனர். மாநகராட்சி உதவி ஆணையர் ஆர்.வினோத், காவல் உதவி ஆணையர் நாகராஜன், மாநகராட்சி நல அலுவலர் (பொ) கலைச்செல்வன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.