மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகிறார்கள். இவர்களை முன்னுக்குக் கொண்டுவர அரசாங்கமும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனாலும், அனைத்துத் தகுதியும் இருந்தும் தனக்குக் கிடைக்க வேண்டிய காவலர் பணிக்காக ஆண்டுக் கணக்கில் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் திருநங்கை ஆராதனா.
தேனியைச் சேர்ந்த ஆராதனா சிறுவயதிலேயே தாயை இழந்தவர். மகள் திருநங்கை என்பதாலோ என்னவோ தந்தையும் இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து பாட்டி தான் இவரை படிக்கவைத்து ஆளாக்கினார். இப்போதும் பாட்டியின் நிழலிலேயே இருக்கும் ஆராதனா, தினமும் மாவு பாக்கெட் வியாபாரம் செய்து பிழைக்கிறார். திருநங்கை என்பதாலேயே சொந்தபந்தங்கள் ஒதுக்கிவிட்டாலும் அவர்களுக்கு மத்தியில் உயர்வான நிலைக்கு வந்து வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இந்தப் பாட்டிக்கும் பேத்திக்கும்.
போலீஸ் வேலைக்குப் போகவேண்டும் என்பது ஆராதனாவின் சிறுவயது ஆசை. அதனால் 2017-ம் ஆண்டு காவலர் தேர்வெழுத விண்ணப்பித்தார். ஆனால், திருநங்கை என்பதால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி எஸ்.ஐ. தேர்வெழுத விண்ணப்பித்த போது அவரது விண்ணப்பமும் இப்படித்தான் நிராகரிக்கப்பட்டது. சட்டப் போராட்டம் நடத்தித்தான் தேர்வை எழுதி இந்தியாவிலேயே முதல் திருநங்கையாக காவல் துறை பணியில் சேர்ந்தார் பிரித்திகா. அவரைத் தொடர்புகொண்ட ஆராதனா, பிரித்திகாவுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மூலமாகவே நீதிமன்றத்தில் வாதாடி, காவலர் எழுத்துத் தேர்வு எழுத உத்தரவு பெற்றார்.
அப்போதும் பிரச்சினை தீரவில்லை. நீதிமன்ற படிகள் ஏறி எழுத்துத் தேர்வுக்கு உத்தரவு பெறுவதற்குள் ஓராண்டு கடந்துவிட்டது. அதனால் உடல் தகுதித் தேர்வுக்கான காலக்கெடு 6 மாதங்கள் கடந்துவிட்டதாகச் சொல்லி ஆராதனாவை உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்க மறுத்தது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிகள் ஏறினார்.
அடுத்து நடந்தவற்றை அவரே விவரிக்கக் கேட்போம். "எங்களோட வாழ்வாதார சூழலைக் கருதி எங்களுக்கு வாய்ப்பளிக்கணும்னு அரசாங்கத்திடம் நீதிமன்றம் சொல்லுது. ஆனா, அரசாங்கத்திடம் அதற்கான தீர்வு இல்ல. எக்ஸ் சர்வீஸ் மேன், விளையாட்டு வீரர்கள், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பலருக்கும் வயது வரம்பில் தளர்வு அளிக்குது அரசு. உரிய காலத்துல உடற் தகுதித் தேர்வுக்குப் போகாதது என்னோட குற்றம் இல்லை. தேர்வு எழுத அனுமதி மறுத்ததால கோர்ட்டுக்குப் போனேன். அந்த வழக்கில் உத்தரவு வர ஒரு வருஷம் ஆச்சு. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? அதனால வயது வரம்பில் தளர்வு கேட்டு மறுபடி கோர்ட்டுக்குப் போனேன். அந்த வழக்கு ரெண்டு வருஷமா நடந்துட்டு இருக்கு.
இதுக்கு நடுவுல பலமுறை காவலர் தேர்வுகள் நடந்து முடிஞ்சிருச்சு. என் மீது கருணை கொண்டு என்னை எப்படியாச்சும் அழைத்து உடல் தகுதித் தேர்வை நடத்தி முடிச்சுடுவாங்கன்னு நம்பிக்கையோட இருந்தேன். ஆனா, இப்பவரைக்கும் அதுக்கான முகாந்திரம் தெரியல. சொந்தபந்தங்களும் நம்மள தூரத்துல வெச்சுட்டாங்க... அரசாங்கமும் இப்படி இழுத்தடிக்குதேன்ற ஆதங்கத்துல ரெண்டு தடவ தற்கொலைக்கும் துணிஞ்சுட்டேன். என் கூட இருந்தவங்க குடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும் தான் இப்ப வரைக்கும் என்னோட உசுரப் பிடிச்சு வெச்சிருக்கு.
2020-ம் ஆண்டு, பட்டியலினத்தவர்களுக்கான வயது வரம்பு தளர்வையும் இட ஒதுக்கீட்டையும் திருநங்கைகளுக்கும் வழங்கலாம்னு இன்னொரு வழக்குல நீதிமன்றத் தீர்ப்பு வந்துச்சு. ஆனா, அந்தத் தீர்ப்பு வந்தப்ப என்னோட வயது இன்னும் அதிகமாகிட்டதால அனுமதிக்கப்பட்ட வயது தளர்வுக்குள்ள என்னால வரமுடியாமப் போச்சு. அதனால அந்த முறையும் உடல் தகுதித் தேர்வுக்குப் போகமுடியல.
இதையெல்லாம் எடுத்துச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அந்த வழக்குல கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வந்த தீர்ப்புல, ‘இத்தனை நாட்கள் அலைக்கழித்ததற்காக, இவங்கள செட்டில் கேட்டகிரியா கருதி அனைத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றதாக கணக்கில் எடுத்துக்கொண்டு எட்டு வாரத்துக்குள்ள இவங்களுக்கு பணி ஆணையை வழங்கி, காவலர் பயிற்சியை அளிக்கணும்’னு உத்தரவாச்சு.
எட்டு வாரம் எப்பவோ கடந்துருச்சு. ஆனா, இப்போ வரைக்கும் எனக்கு பணி ஆணை வரல. பணி ஆணை வழங்கலைன்னா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவோம்னு அரசுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினோம். அதுக்குப் பதில் இல்லை. எனக்கு வேலை கொடுக்கணும்னு நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்புல மேல்முறையீடு செய்யப் போறதா சொல்றாங்க. எங்களை மாதிரியான ஆதரவற்ற மக்களுக்கு நீதிமன்றம் தான் உரிய பரிகாரத்தைப் பெற்றுத் தரணும். ஆனா, அந்த நீதிமன்றமே பரிகாரம் சொன்ன பிறகும் எதுக்காக இப்படி இழுத்தடிக்கிறாங்கன்னு தெரியல. எல்லாருக்கும் விடியல் தருவதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின், என்னோட இந்த வாழ்க்கைப் போராட்டத்துக்கும் ஒரு விடியலைச் சொல்லணும்னு உங்க மூலமா வேண்டிக்கிறேன்” என்று நா தழுதழுக்க சொல்லிமுடித்தார் ஆராதனா.
தகுதி இருந்தும் தனக்கு காவல் துறை பணி மறுக்கப்படுவதால் தன்னை கருணைக் கொலை செய்துவிடவும் அல்லது குடியுரிமையை ரத்துசெய்து அகதியாக்கி விடவும் என தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பொதுமக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஆராதனா, அரசு தனக்கு வேலை தர மறுத்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் சேர்ந்து சேவையாற்றி வருகிறார். இதற்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் உள்ளிட்டவர்கள் அவருக்கு பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும், ஆராதனாவின் காவல் துறை பணி நியமன விவகாரத்தில் அவருக்கு உரிய தீர்வை பெற்றுத்தரத்தான் ஆளில்லை.
நாங்களும் சரிநிகர் என்று திருநங்கைகள் சமுதாயத்தில் முன்னேறினாலும் அவர்கள் மீதான இந்த சமூகத்தின் பார்வை இன்னமும் முழுமையாக மாறவில்லை. அப்படி இருக்கையில், அரசும் அவர்களை இப்படி அலைக்கழிப்பது எந்த விதத்தில் சரி?