நிழற்சாலை


குழந்தைமை விதி


பொம்மைகள்

உடைபடாத வீட்டில்

பொம்மைகளாகவே

இருக்கின்றனர்

குழந்தைகள்.


- கி.ரவிக்குமார்

வெற்றிடமென...

அறுபட்ட மரம் ஒன்றின்

இறுதிக்காற்று ஓடி வந்து

கொஞ்சம் ஒளிந்திருக்கலாம்

குழந்தையொன்று.

ஏதோவொரு காதலின்

முடிவுரைக்கான

கண்ணீர் துளியின் சிதறல்

கறையாகக் கொஞ்சம் படிந்திருக்கலாம்.

வானத்தின்

ஒளிக்கீற்று ஒன்று

பட்டுத்தெறித்துப் பதுங்கியிருக்கலாம்.

பாடலின்

இன்னிசைப் பிசிறொன்று

இவற்றுடன் கலந்துமிருக்கலாம்...

வெற்றிடமென நீங்கள் குறிக்கும்

அவ்விடத்தில்!

-கெளந்தி மு

விருட்சம்


எத்தனை முறை வெட்டினாலும்

மன்னித்து திரும்பவும் துளிர்த்து

இலவசமாக நிழலை

பிரியத்துடன் பூமிக்கு

பரப்புகிறது

பூக்கள் தெளித்து சிலிர்ப்பூட்டுகிறது...

தாயாகவும் காதலியாகவும்

மாறி மாறி உருவெடுத்து

மறுபடியும் துளிர்க்கிறது

மன்னிக்க மட்டுமே தெரிந்த

மரம்.

- ச.ஆனந்தகுமார்

பறத்தல் மொழி

கூட்டுப்புழுப் பருவத்தின்

நீள் உறக்கக்

கடினப் பொழுதுகளையெல்லாம்

சிறகின் வண்ணங்களில்

படபடப்பாய் மொழிபெயர்க்கிறது

பட்டாம்பூச்சி...

- கி.சரஸ்வதி

பக்தனாகும் தருணம்

என் புருவங்களின்

இடைவெளி தூரத்தை

தன் கையினால்

பாலமிட்டு

திருநீறு என் விழிகளில்

விழுந்துவிடாதவாறு

இதழ் குவித்து

அவள் ஊதி ஒதுக்கும்

தருணத்திற்காகவே

ஒவ்வொரு முறையும்

நாத்திகம் தொலைக்கிறேன்

நான்.

- மகேஷ் சிபி

நீர் சிற்பம்

இறுதியாக

எவ்வடிவமும்

அடையவியலா

வாதையில்தான்

அனைத்து உருவங்களின்

பிம்பங்களையும்

சிறைப்பிடித்துவிடுகிறது

மழைத்துளியின்

கண்ணீர்.

-ரகுநாத் வ

பாடத்திட்டத்திற்கு வெளியே!

மீன்களின் பள்ளியில்

பாடமாக்கப்படவே இல்லை

தூண்டிலும் வலையும்

இன்னபிற மீன்பிடி

உத்திகளும்!

-வீ.விஷ்ணுகுமார்

தோற்கும் யாசகம்

சில்லறை இல்லையெனச்

சொல்லிக் கடக்க

கனக்கிறது

வெற்று சட்டைப் பை...


- ஷர்ஜிலா பர்வீன் யாகூப்

x