‘ஈழம் மலரவைக்கிற இலை கட்சிக்கே இரண்டகம் பண்றார் சீமான்’!


அன்று அதிகாலை முதலே அறையில் பாச்சா இல்லை என அறிந்த பறக்கும் பைக் பதற்றத்துக்குள்ளானது. பேட்டி எனும் பெயரில் லூட்டி அடிக்கும் பாச்சாவை ‘பார்ட்டி’ ஆட்கள் கூட்டிப்போய் ஒரு காட்டு காட்டியிருப்பார்களா என்றெல்லாம் வருத்தம் கலந்த பீதியுடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்த பைக், ஷார்ட்ஸ்-டிசர்ட் சகிதம் பந்தாவாக பாச்சா வருவதைப் பார்த்ததும் பகபகவென சிரித்தது.

“என்னய்யா இது கோலம்? நீ தீவிர திமுக எதிரி மாதிரி தினம் உதிக்கும் சூரியனையே பார்க்காம தூங்குவே... இப்ப என்ன காலங்கார்த்தாலேயே கால்நடையா வாக்கிங்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டே?” என்று பைக் கேட்க, “எல்லாம் கொழுப்புதான்” என்று ஒற்றை வரியில் பதிலளித்தான் பாச்சா.

“என்னப்பா ஒரு பேச்சுக்கு விசாரிச்சா, கொழுப்பு கிழுப்புன்னு சீமான் - ஜெயக்குமார் மாதிரி சீறுறே?” என்று பரிதாபமாகக் கேட்டது பைக்.

“அட நீ வேறப்பா... கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுன்னு கொழும்பு வரைக்கும் ஓட்டப் பயிற்சிக்குப் போகச் சொல்லிட்டார் டாக்டர். கோத்தபயவைவிட கொடுமையான ஆட்கள் இருக்கிற ஊர்ல வாழ்ற நமக்கு அதெல்லாம அதிகம்னு கோடம்பாக்கத்தை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்தேன்” என்றான் பாச்சா.

“அப்படீன்னா இன்னைக்கு தலைவர்களுக்குப் பதிலா கலைஞர்களைப் பேட்டி எடுக்கப்போறியா?” என்றது பைக்.

“நல்லா இருக்கு கதை! ‘பணக்கொழுப்பு’, ‘வாய்க்கொழுப்பு’ன்னு பக்கா பாய்ன்ட் கிடைச்சிருக்கு. அதை வெச்சு அரசியல்வாதிகள்கிட்ட பேட்டி எடுக்க ஆயிரம் மேட்டர் இருக்கு” என்றான் பாச்சா,

அன்று முதலாமவர் ஜெயக்குமார்.

‘பழனிசாமி அதிமுக’வின் பத்திரிகை தொடர்பாளரும், பாக்ஸர், பாடகர் உள்ளிட்ட பல அவதாரங்களுக்குச் சொந்தக்காரருமான ஜெயக்குமார், கோபதாபங்களையெல்லாம் ஒரே கோட்டில் இணைத்து குத்துச்சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ‘நாம் தமிழர்’ தலைவரின் நாமகரணத்தை உச்சரித்தபடி உக்கிரமாக அவர் விட்ட குத்துக்கு ‘பஞ்ச்சிங் பேக்’ பங்ச்சரானதைப் பார்த்ததும் பாச்சாவுக்குள் பதற்றம் பரவியது.

“என்ன சார்! ஒரு சில கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் உங்களை ‘அண்ணன்’னு அவ்வளவு மரியாதையா சொன்னார் சீமான். அப்படிப்பட்ட பாசமிகு தம்பியைப் பந்தாடுறதா நினைச்சு பாக்ஸிங் பயிற்சி பண்றதெல்லாம் சரியா? கராத்தேல பிளாக் பெல்ட் வாங்குனதா(வும்) கதை சொல்ற ஆள்கிட்ட இதெல்லாம் பலிக்குமா?” என்று ‘வரிக்கு வரி’ எதிர்க்கட்சிகளை வாரிய நிர்மலா சீதாராமன் மாதிரி நீளமாகக் கேள்விகளை அடுக்கினான் பாச்சா.

“பின்னே என்னப்பா! திராவிடக் கட்சிகள்னு இதுவரைக்கும் தித்திக்க தித்திக்க திமுகவைத்தான் திட்டிட்டு இருந்தார். இப்ப ‘ஈழம் மலர’ உழைச்ச இரட்டை இலை கட்சிக்கே இரண்டகம் பண்ற மாதிரி என்னென்னமோ பேசுறார். அதான் ஆதங்கமா இருக்கு” என்றார் ஜெயக்குமார்.

“ம்க்கும். அதிமுக கழகமே இரண்டு அகமா பிரிஞ்சு கிடக்கு. அதிமுக ‘நேம் போர்டு’க்கே ஆளாளுக்கு அடிச்சிக்கிறீங்க. இதுல அடுத்த கட்சிக்காரங்க வந்துதான் உங்க கட்சிக்கு உலை வைக்கணுமா?” என்ற பாச்சா, “எல்லாம் சரி சார்! அதிமுக ‘ஒரிஜினல் ஒருங்கிணைப்பாளர்’ உங்க தலைவர்கள் யாரையும் பார்க்க மாட்டேன்னு ஒதுங்கிக்கிட்டாராமே?” என்று ஒரண்டை இழுத்தான்.

மோடியைக் கோடிட்டுக் காட்டுவதைப் புரிந்துகொண்ட ஜெயக்குமார், “எதுக்கெடுத்தாலும் ‘மோடி மோடி... கோ கோ’ன்னு சொல்லிட்டு இப்ப ஓடி ஓடி வரவேற்கிற திமுக இல்லைப்பா எங்க கட்சி. தில்லான எதிர்க்கட்சியா களத்துல நின்னு கலவரம் பண்ற... சாரி, போராட்டம் பண்ற கட்சி என்னிக்கும் அதிமுகதான்” என்றார்.

“அப்படீங்களா சார்? அதிமுகன்னு நீங்க சொல்ற கட்சியோட ஆபீஸ் சாவி இப்ப யார்கிட்ட இருக்கு?” என்று பாச்சா கேட்டதும், பல்லைக் கடித்த ஜெயக்குமார் பாக்ஸிங் கிளவுஸை இறுக்கிக் கட்டத் தொடங்க... பாச்சா அங்கிருந்து பாய்ந்தோடினான்.

அடுத்து சீமான்.

புதிதாக வாங்கிய காருக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்துவிட்டு, ‘புலிகள்’ இருக்கும் திசை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டு, தம்பிகளுக்குக் கொள்கை விளக்க வகுப்பை ஆரம்பித்தார் சீமான்.

அப்போது அங்குவந்து அவரை இடைமறித்த பாச்சா, “பாலிடிக்ஸ் பண்ணி ‘பணக்கொழுப்பு’ வளர்த்துக்கிட்ட தலைவர்களுக்கு இணையா எளிய தமிழ்ப் பிள்ளைகளும் எப்படியாவது பொழைச்சிக்கலாம்ங்கிறதுக்கு எடுத்துக்காட்டா இருக்கீங்க சார். எப்ப(டி) வாங்கினீங்க இந்தக் காரை?” என்றான்.

பாச்சாவின் பகடியைப் புரிந்துகொண்டு படுகோபமடைந்த சீமான், சட்டென சாந்த ரூபத்தை முகத்தில் ஏந்தி, “இதெல்லாம் எதிர்காலத்துல எங்க ஆட்சி எப்படி இருக்கும்ங்கிற காட்டுறதுக்காக சிம்பாலிக்கா சொல்ற சிம்பிள் கார் தம்பி! அதுக்காண்டிதான் அண்ணன் ‘ஃபார்ச்சூனர்’ காரை வாங்கியிருக்கேன். ‘ஃபார்ச்சூனர்’னா என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, தன்னருகில் இருந்த தம்பியிடம் தணிந்த குரலில் ஏதோ பேசிய சீமான், “அதாவது, அதிர்ஷ்டக்காரர்னு சொல்லலாமாம். எதிர்காலத்துல என் இன மக்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரப்போற தலைவர்னு அர்த்தப்படுத்திக்கலாம் தம்பி. எதிர்காலத்துல நான் அதிபர்... அதாவது முதல்வராகி எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பேன்” என்றார்.

“ஆனா, ஃபார்ச்சூனர்னா பணக்காரர்னுதான் அகராதி காட்டுது. வசிக்க வாடகை வீடே கிடைக்கிறதில்லைன்னு ‘வண்டி வண்டியா’ வருத்தப்படுற உங்களுக்கு வகைக்கொரு கார்ங்கிறது நல்லாவா இருக்கு?” என்று பாச்சா கேட்க, சட்டென கோபமடைந்த சீமான், “பெருங்கடலுக்குள்ளே பேனா சிலை வைக்கிற அளவுக்குப் பெரிய பணக்காரன் இல்லைப்பா நானு. தனிச்சு நின்னு தேர்தலைச் சந்திக்கிற தன்னம்பிக்கை உள்ள ஆணு” என்றார்.

“செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்துல மோடி படம் போடாதது தமிழர்களுக்கு இழுக்குன்னு லிஸ்ட்ல இல்லாத பிட்டையெல்லாம் போட்டு தாமரைக் கட்சிக்காரங்களுக்கே டஃப் கொடுக்கிறீங்களே... உங்களுக்குன்னு சொந்தமா ஒரு கட்சி இருக்கு... ஞாபகமிருக்கா?” என்றான் பாச்சா.

“இதையெல்லாம் கூட்டணிக்காகக் கொள்கையைக் கூறு போடுற கூட்டத்துக் கிட்டே கேட்கிற கேள்வி தம்பி. நான் கட்சி ஆரம்பிச்சதுல இருந்து தனிச்சுப் போட்டியிட்டு தன்னிகரில்லா தலைவரா வாழ்ந்துட்டு இருக்கேன். வெளங்கிக்கிடணும்... ஆமா” என்றார்.

‘அதுசரி, வெற்றி கிடைக்கணும்னு நினைக்கிற கட்சிதானே வெறித்தனமா வேலை பார்க்கும். தனிச்சு நின்னு தவிச்சுப்போற தம்பிகள்கிட்ட கேட்டா தெரியும் கதை’ என்று மைண்ட் வாய்ஸில் கேட்டுக்கொண்ட பாச்சா, “5ஜி ஏலத்துல ஏக கோடி இழப்பு நேர்ந்திருக்குன்னு எதிர்க்கட்சிக்காரங்க எதிர்த்துக் கேட்டா, 8 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்கிறீங்களே...ஏலம் நடந்ததே இப்பத்தானே?” என்று கேட்க, என்ன பதில் சொல்வது என யோசித்துக்கொண்டே ‘புஹா...புஹா’வென சீமான் சிரிக்க... பதறிப்போய் தெறித்தோடினான் பாச்சா!

x