‘இன்டர்னல் பாலிடிக்ஸ்ல இன்டர்ஃபிரன்ஸ் பண்ண இன்டரெஸ்ட் இல்லை!’


அன்று காலை ரொம்பவே குதூகலமாக இருந்தது பறக்கும் பைக். ‘மை டியர் பூதம்’ படத்தின் டீஸரைப் பார்த்திருந்ததால் வந்த குஷி அது. தன்னை ஒரு நவீன பூதமாகவும், பாச்சாவை நாப்கின் போட்ட பச்சாவாகவும் சித்தரித்துக்கொண்டு சிரித்து மகிழ்ந்திருந்தது. “ரொம்பச் சிரிக்காதே! டீஸர் மட்டுமல்ல தியேட்டர்ல படமும் ரிலீஸ் ஆகிடுச்சு. பார்த்தா இத்தனைப் பரவசமா இருக்கமாட்டே” என்று அதைச் சீண்டினான் பாச்சா. சட்டென்று மாறிய மனநிலையில், “இப்பெல்லாம் எந்தப் படம்யா நல்லா இருக்கு? யூத்துக்குப் பிடிக்கும்னு எடுத்து யூடியூப் சேனல்கள்ல பேட்டி கொடுத்தே ஓட்டிடறாங்க” என்று சிரித்தது பறக்கும் பைக். “பின்னே சும்மாவா... நாசாவெல்லாம் இப்பத்தானே யுனிவெர்ஸைப் படமா எடுக்கிறாங்க... நம்மூர் சினிமாக்காரங்க படத்துலேயே யுனிவெர்ஸைப் புதைச்சு வைக்கிறாங்களே!” என்று சொல்லிவிட்டு, அன்றைய பேட்டிகளுக்கு ஆயத்தமானான் பாச்சா.

முதலில் கமலாலயம்.

“...ண்ணா! அதெல்லாம் சமாளிச்சிடலாம்ங்க. என்ன ஒண்ணு... காலேஜ்ல செல்ஃபின்னு போனோம்னா... போறதுக்கு முன்னாடியே கதவைச் சாத்திட்டு கதற விடுறாங்க. அதான் தியேட்டருக்குப் படையெடுக்கலாம்னு இருக்கோம்ங்க. சினிமா பார்த்துட்டு வர்றவங்க கிட்ட செல்ஃபி எடுத்துக்கலாம்னு திட்டம் போட்டிருக்கோம்” என்று யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார் செல்ஃபி புள்ள அண்ணாமலை!

அந்த நேரத்தில் அங்கு ஆஜரான பாச்சா, “சூப்பர் சார். சிக்கண்ணா காலேஜ்ல ‘செல்ஃபி வித் அண்ணா’ பிளான் கன்னாபின்னான்னு காலாவதி ஆகிடுச்சு. ஆனா... தியேட்டருக்குள்ள போனவங்க எப்படியும் திரும்பி வெளில வந்துதானே ஆகணும்? அப்ப மைக்கை வச்சு ரிவ்யூ எடுக்கிற மாதிரி பக்கத்துல போய் படக்குன்னு செல்ஃபி எடுத்துடலாம்... அதுவும் ‘இரவின் நிழல்’ படம் பார்த்துட்டு வர்றவங்ககிட்ட செல்ஃபி எடுத்துக்கிட்டா, ஸ்க்ரீனைவிட்டு வெளில வந்த பின்னாடியும் நான்-லீனியர் ஸ்க்ரீன்ப்ளே கன்டினியூ ஆகுதுன்னு கைதட்டுவாங்க. நல்ல ஐடியா” என்றான்.

“ஏதோ கலாய்க்கிறீங்கன்னு தெரியுதுங்கண்ணா. ஆனா, பார்த்திபன் படம் மாதிரி பட்னு புரிய மாட்டேங்குது. பார்த்துக்கலாம்” என்று தலையை ஆட்டிக்கொண்ட தமிழக பாஜக தலைவர், “மிஸ் ஆகிடுச்சுன்னா மட்டும் மீடியாக்காரங்க நல்லா கேள்வி கேட்கிறீங்க. ஆனா, திமுக அமைச்சர்கள் திமிர்த்தனமா மக்கள் மண்டையில அடிக்கிறதைக் கண்டுக்க மாட்டேங்கிறீங்களே...” என்று சலித்துக்கொண்டார்.

“அதுசரி சார். மக்கள் மண்டையில அடிக்கிறவங்க, வயித்துல அடிக்கிறவங்கன்னு அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்கா பண்ற அத்தனை சேவைகளையும்(!) ஊடகங்கள் ஒண்ணு விடாம காட்டிட்டுத்தானே இருக்கு?!” என்ற பாச்சா, “அதிகாரத் திமிர் அமைச்சர்களுக்கு வந்திருக்குன்னு சொல்றீங்களே... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டா நிம்மதி இழந்துட மாட்டாங்களா?” என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.

“நான் தமிலக(!) அமைச்சர்களைச் சொன்னேங்கண்ணா. அவங்க பத்து வருஷமா பதவி மேல பசில இருந்துட்டு பதவிக்கு வந்ததும் பங்கு போட ஆரம்பிச்சுட்டாங்க. பாஜக அமைச்சர்கள்லாம் பாரத மாதாவுக்கு சேவை செய்றதுக்குன்னே பாலிடிக்ஸுக்கு வந்தவங்கண்ணா. ஏழை மக்களோட பங்காளர்கள் எங்காளுங்கதான்” என்றார் அண்ணாமலை.

“தெரியும் சார். அவங்களுக்கு வர்ற வருமானத்தைத்தான் ஜிஎஸ்டின்னு சொல்லி பங்கு பிரிச்சி எடுத்துக்கிறீங்களே” என்று முணுமுணுத்த பாச்சா. “அத்தனை அந்நியோன்யமா இருந்த அதிமுகவுல அநியாயத்துக்குக் களேபரம் நடக்குது. ஆளாளுக்கு அடிச்சிக்கிறாங்க... அமைதியா நின்னு வேடிக்கை பார்க்கிறீங்களே... ஐபிஎஸ் ஆபீஸரா இருந்த ஆள் நீங்க. ‘அடிச்சிக்காதீங்க!’ன்னு சொல்லி அவங்களை அமைதிப்படுத்தியிருக்கலாமே?” என்றான் பாச்சா.

“எந்தக் காலகட்டத்துலயும் ஏடிஎம்கே-யில எங்க இன்டர்ஃபிரன்ஸ் இருக்காதுன்னு எழுதியே தர்றேங்கண்ணா. மோடிஜி சொன்னதுனாலதான் போன தடவையும் அண்ணன் ஓபிஎஸ், இரட்டை இலையைக் காக்க ஈபிஎஸ் கூட கைகோத்தார். இதுல இருந்தே தெரியலையா? ஏடிஎம்கே-யோட இன்டர்னல் பாலிடிக்ஸ்ல என்டர் ஆகிறது, இன்டர்ஃபிரன்ஸ் பண்றதுன்னு எதுலயும் நாங்க இன்டரெஸ்ட் காட்டமாட்டோம்னு?!” என்று அமைதி தவழ புன்னகைத்தார் அண்ணாமலை.

அந்தக் கணத்தில் ஏனோ பொன்னையன் போட்டுக்கொடுத்த... மன்னிக்கவும்... பேட்டி கொடுத்த நினைவு வரவே அண்ணாமலையிடம் விடைபெற்றுக்கொண்டு.... துரைமுருகன் இல்லம் நோக்கிப் பறந்தான் பாச்சா.

“அட இல்லப்பா! அதிமுகவுல என்ன நடக்குதுன்னே தெரியாது ராஜா. அப்படி ஒரு கட்சி இப்பத்தான் ரிஜிஸ்டர் ஆகியிருக்குன்னு சொல்றாங்க. யாரோ எம்ஜிஆர்னு ஒரு நடிகர் ஆரம்பிச்ச கட்சியாம். நாம எதுக்கு தம்பி நடிகர்கள் கட்சி பத்தியெல்லாம் கவலைப்படணும்?” என்று தொண்டர் ஒருவர் தொலைதூர ஊரிலிருந்து தொலைபேசியில் அழைத்திருந்த அழைப்புக்கு ‘ரெக்கார்டு’ பிரச்சினை வராத அளவுக்கு ‘ரிப்ளை’ கொடுத்துக்கொண்டிருந்தார் துரைமுருகன்.

“கோலப்பன் கால் ரெக்கார்டு வெளில வந்ததுக்கு அப்புறம், அரசியல் தலைவர்கள் அன்றாடம் குட் மார்னிங் சொல்ற பழக்கத்துக்கே குட் பை சொல்லிட்டாங்களாமே சார்?” என்று குடைச்சல் கொடுத்தவாறு கும்பிட்டு வணக்கம் சொன்னான் பாச்சா.

“கோலப்பன் யாருன்னு அடாவடியான அதிமுககாரங்களுக்கே தெரியாதம்யா. காலங்காலமா அமைதி அரசியல் நடத்திட்டு இருக்கிற எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அகலச் சிரித்தார் அமைச்சர் துரைமுருகன்.

“கோலப்பன் யாருன்னு தெரியாதுன்னு சொன்னீங்க சரி. புட்டுப் புட்டு வச்ச பொன்னையன் யாருன்னாவது தெரியும்ங்களா?” என்று புன்னகைத்தபடி கேட்டான் பாச்சா.

“பொன்னையன்னு ஒரு பெயரைப் புதுசா கேள்விப்படுறேன் தம்பி. ‘பட்டிக்காட்டு பொன்னையா’ மாதிரி புதுசா படம் எதுவும் எடுக்கிறாங்களா?” என்று துண்டை உதறிக்கொண்டார் துரைமுருகன்.

“சரிதான் சார். கே.பி.முனுசாமி பத்தி கேட்டா ‘கேள்விப்பட்ட பெயரா தெரியலையே... கேடிவியில வர்ற டப்பிங் பட டைட்டிலா?’ன்னு கேட்டு கெடா வெட்டுவீங்க. கெளம்புறேன்” என்று அங்கிருந்து அகன்றான் பாச்சா.

அடுத்ததாக சசிகலா.

பூமிப் பந்தெங்கும் புயலை உருவாக்கப்போகும் புரட்சிப் பயணத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்தார் புரட்சித்தாய் சின்னம்மா.

ஏழைத் தொண்டர்கள் கொண்டுவந்திருந்த டாடா சுமோ, குவாலிஸ் போன்ற எளிமையான வாகனங்கள் வரிசையாக நிற்க, புரட்சிக்காரத் தொண்டர்கள் புரோட்டா சாப்பிடச் சென்றிருந்தார்கள்.

“அட... புரட்டாசி விரதம் இல்லைப்பா. புரட்சிப் பயணம். வெறும்(!) ஆயிரம் வண்டிதான் வந்திருக்கு. நான் பெங்களூருவுல இருந்து வெற்றிப் பயணத்தைத் தொடங்குனப்பவே ரெண்டாயிரம் கார்கிட்ட வந்துச்சுப்பா. புரட்சின்னு சொன்னா மக்கள்கிட்ட எழுச்சி வர வேண்டாமா? புதுசா வந்திருக்கிற கார்ல ஒரு ஆயிரத்தை அனுப்பி வைங்க” என்று யாரோ ஒரு கார் கம்பெனி ஓனரிடம் கட்டளையிட்டுக்கொண்டிருந்தார் சசிகலா.

“என்னம்மா நீங்க? இப்படி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிற மாதிரி புரட்சி பண்ணினா, மக்கள்கிட்ட மிரட்சிதானே மிஞ்சும்? ஒரு கட்சியோட பொதுவான பொதுச் செயலாளரா(!) இருக்கிற உங்களுக்குப் பொறுப்புணர்வு இன்னும் ஜாஸ்தியா இருக்க வேண்டாமா?” என்றபடி அவர் முன் ஆஜரானான் பாச்சா.

“தம்பி. போன தடவை திருவள்ளூர் மாவட்டத்துல புரட்சிப் பயணத்தைத் தொடங்கினதுக்கு அப்புறம் நிறைய திருப்பம் வந்திருக்கு... அதாவது, அரசியல்ல திருப்பம் நடந்திருக்கு. இந்த தடவை தி.நகர்ல இருந்து தொடங்குறதால அதிமுகவுல மட்டும் இல்லை... திமுகவுலயும் திருப்பம் வரும். திரும்பவும் அதிமுக ஆட்சிக்கு வரும்” என்றார் சசிகலா.

“அப்படி வந்தா சிஎம் யாரு? ஈபிஎஸ்ஸா, ஓபிஎஸ்ஸா இல்லை... விகேஎஸ்ஸா?” என்றான் பாச்சா.

அப்போது, ‘புரட்சித் தலைவரின் வழிவந்த புரட்சித் தலைவியின் புரட்சித் தோழி சின்னம்மா வாழ்க!’ என்று முஷ்டி தூக்கியபடி முழக்கமிடத் தொடங்கினார்கள் புரட்சித் தொண்டர்கள். புறுமுதுகிட்டுப் புறப்பட்டான் பாச்சா.

x