சிறார்களிடையே வாசிப்புத் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்!


கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் பாடநூல்கள் வழங்கப்பட்டு, 20 நாட்களைக் கடந்து வகுப்புகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. வகுப்பறை பாடங்கள், சிறப்பு வகுப்புகள் என புத்தகங்களுடனே சிறார்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல வாசிப்பு இருக்கும் ஒரு மாணவனால்தான், பாடப் புத்தகச் சுமையை இலகுவாக எதிர்கொள்ள முடியும். அரசுப் பள்ளிகளில் வாசிப்புத் திறனை மேம்படுத்த ஏதுவாக புதிய கதைப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பாடப் புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, அரசு சார்பில் பள்ளிச் சிறார்களிடையே பல்வேறு நிகழ்வுகள் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனாலும், மாணவர்களிடையே வாசிப்புத் திறன் குறைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. சிறார்களிடையே புத்தக வாசிப்புத் திறன் மேம்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை முன்வர வேண்டும் என அறிவார்ந்த சமூகத்தை முன்நகர்த்திச் செல்ல விரும்பும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து தொழிற்கல்வி கணினி ஆசிரியர்கள் சங்க கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் வி.முத்துக்குமரன் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவையில் நடந்த கல்வி மானியக் கோரிக்கையின் போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ‘வீடுகள் தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, ஊக்குவிக்க விருது தரப்படும்’ என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்க ஒன்று.

இதைத்தாண்டி மாணவர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்த ஆசிரியர்களோடு கல்வித்துறை ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் வாசிப்பை விரும்பும் வகையிலான உளவியல் சார் நடவடிக்கைகள் பள்ளி அளவில் கொண்டு வரப்பட வேண்டும்.

நல்ல வாசிப்பின் மூலமே நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும். தற்போது அரசு செய்து வரும் நல்ல முயற்சிகளை செயல்வழிபடுத்த கூடிப்பேசி முடிவெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்” என்று தெரிவிக்கிறார்.

மொபைல் மீதான கட்டுக்கடங்காத ஆர்வம் பள்ளி மாணவர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அசாதாரணப் போக்கை கட்டுப்படுத்த, ‘வாசிப்பு’ என்ற பெரிய கடிவாளம் தேவைப்படுகிறது. புத்தக வாசிப்பு வளரிளம் பருவத்தினரை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். பிற நல்ல புத்தகங்களின் வாசிப்பு வளர வளர, பாடப் புத்தகங்களின் வாசிப்பு இலகுவாகி விடும்.

நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியரையும் புத்தக வாசிப்பை நோக்கி நகர வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதை உற்று உணர்ந்து ஒழுங்காய் செய்யும் சமூகமே உயர்ந்த நிலையை நோக்கி நகரும்.

x