விருதுநகர் | வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்பு காசு  கண்டெடுப்பு


சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3வது கட்ட அகழ்வாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கடந்த 18-ம் தேதி 3வது கட்ட அகழ்வாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த அகழ்வாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், கல் மணிகள் மற்றும் பழங்கால செங்கல்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப் பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல் விளக்கு, சுடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில் வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மனிதர்கள் பயன்படுத்திய சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது. இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் ‘ஸ்ரீ வீர’ என்று தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வதி தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இந்த நாணயத்தில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்கள் அனைத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

x