நிழற்சாலை


நினைவுத் தூளி


ஊஞ்சலாட

அழைக்கிறது குழந்தை

உடனே

பால்யத்திற்கும்

நிகழ்காலத்திற்கும்

நீண்டு சென்று திரும்புகிறது

அப்பாவின் நினைவு.


- சாமி கிரிஷ்

பயண இசை

நீயின்றி தொடரும் பயணத்தில்

பின்னோடும் மரங்கள் என

விரைந்து நினைவுகளைக் கடக்கும் முயற்சியில்

புத்தகத்தைக் கையில் எடுக்கிறேன்

ஜன்னலோரக் காற்றுக் காதோர முத்தங்களை

நினைவுபடுத்தும் அதே வேளையில்

செவி வழி இதயம் துளைத்து

மீண்டும் நுழைகிறாய்

நம் இருவருக்கும் பிடித்த

இளையராஜா பாடலைச்

சாக்கு வைத்து.

- கி.சரஸ்வதி

கருணைக் கடல்

அடங்காப் பசியோடு

அயராது பின்தொடர்ந்து

அலைகளை

கொத்திக்கொண்டேயிருக்கும்

பறவையொன்றுக்கு

உயிருள்ள ஒரு மீனை

உணவாகத் தந்து

தாயாகிறது கடல்.

- காசாவயல் கண்ணன்

கனவாதல்

பிறை நிலா

காற்றாடி நூல்

திரையிலாடிய

புஜ்ஜியின் வால்

நாய்க்குட்டியின்

காதுமடல்

குல்பி ஐஸ்

நேற்று பூங்காவில் வாசமிழுத்த

பெயரறியா மலரின் காம்பு


கனவில் ஏதாவதொன்றாகியிருக்கும்

பாக்கியம் கிடைத்தது

உறங்குபவளின்

பிஞ்சுக் கைக்குள்

சிறைபட்டிருக்கும்

என்

ஒற்றை விரலுக்கு.

-ந.சிவநேசன்

பிணைப்பு

கடவுளின் சிலைக்கு

அபிஷேகங்களைச்

செய்வதற்கு சற்றும்

சளைத்ததல்ல

புத்தகத்திற்குச்

சட்டகமிட்டு

'பைண்டிங்' செய்யும்

முதியவரின்

பசையேறிய கைகள்!

- ரகுநாத் வ

வலி


சட்டென முறிந்துபோகிறது

பென்சில்

மரம் பற்றிய

கவிதையொன்றை எழுதுகையில்!

- மு.முபாரக்

குச்சிப்பையில் கிராமம்


நகரத்திலிருந்து

கிராமத்துக்கு

திரும்புகிறாள்

குச்சிப் பையில் இருந்து

தொட்டில்

குழந்தையைப் போல

எட்டிப்பார்க்கிறது

ஒரு காலத்தில்

உயிர்ப்புடன் இருந்த

அவளது கிராமத்தின்

காய்கறித் தோட்டம்

நகரம் விழுங்கி

உமிழ்ந்த

அவள் கடக்கும்

தார்ப் பாதையின் திருப்பத்தில்!

- வீ.விஷ்ணுகுமார்

x