கூட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி


தென்காசி: சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியில் இன்று முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி விழும் சாரல் மழை, மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், ஆர்ப்பரிக்கும் அருவிகள் இவையனைத்தும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். இதனால் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு கோடை மழையால் மே மாதத்தில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதைத் தொடர்ந்து மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியது. கடந்த வாரம் சாரல் சீசன் களைகட்டியது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சாரலின் தீவிரம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில், வார நாட்களிலும் கூட்டம் உள்ளது.

கடந்த மே மாதம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தார். இதனால் அருவிகளில் குளிக்க சில நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அருவிக்கரை வரை செல்ல அனுமதிக்கப்படாமல் சிறிது தூரத்துக்கு முன்பாகவே வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. வனத்துறை சார்பில் பழைய குற்றாலத்தில் சோதனைச் சாவடி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பழைய குற்றாலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், காப்புக்காடு பகுதியில் உள்ள இந்த அருவியை வனத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வனத்துறையினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தற்காலிகமாக இரவு 8 மணி வரை பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதித்து ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது இன்று முதல் அமலுக்கு வந்தது. கூட்டம் அதிகரிப்பு காரணமாக தற்காலிக ஏற்பாடாகவே அருவியில் குளிக்க கூடுதல் நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.