சிறகை விரி உலகை அறி-55:பனி மலையில் பகல் பொழுதில்!


மரணித்துக் கொண்டிருக்கும் சிங்கம்

இயற்கையைத் துலாவும் விழிகளுடன் நகரத்து வீதிகளில் நடந்தேன். சுவர்களை வனப்பூட்டும் பழங்கால ஓவியங்களை ரசித்தேன். சாலையின் ஓரங்களில் ஓடும் மின்சார ரயில்களை நின்று நோக்கினேன். காட்சி படிமங்களால் கண்கள் நிறைந்தன. ‘மரணித்துக் கொண்டிருக்கும் சிங்கத்தைப்’ (Dying lion monument) பார்க்க கால்கள் விரைந்தன.

சிங்கத்தின் மரணம்

மரங்கள் சூழ்ந்த பகுதியில் மக்கள் குழுமியிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே சிறிய குளம் இருந்தது. நீரில் முகம் பார்த்த இலைகளுக்கு, அலைகளால் நன்றி சொன்னது குளம். குளத்தையொட்டி உயரமான பாறை. பாறையில் வேதனையுடன் குன்னிப் படுத்திருக்கிறது ஒரு சிங்கச் சிற்பம். 10 மீட்டர் நீளத்தில், 6 மீட்டர் அகலத்தில் மணற்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் புரட்சியின்போது, 1792 ஆகஸ்ட் 10-ல் புரட்சியாளர்கள் பாரிசில் உள்ள டூலரிஸ் அரண்மனைக்குள் புகுந்து தாக்கினார்கள். அப்போது, அரச குடும்பத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் உயிரிழந்த சுவிஸ் நாட்டு பாதுகாப்பு வீரர்களின் நினைவையும், துணிச்சலையும் தியாகத்தையும் பறைசாற்றுகிறது இந்த நினைவிடம்.

முதுகில் பாய்ந்த ஈட்டியுடன் வாய் பிதற்றி அழுகிறது சிங்கம். எழ முடியாத சிங்கத்தின் முன்னங்கால்களில் ஒன்று, பிரான்ஸ் முடியாட்சியின் கேடயத்தின் மீது உள்ளது. மற்றொரு கால், பலமின்றி கிடக்கிறது. அருகிலேயே, சுவிஸ் நாட்டு சிலுவையுடன் மற்றொரு கேடயம் இருக்கிறது. மேற்சுவரில், ’சுவிஸ் நாட்டின் ராஜ விசுவாசம் மற்றும் வீரத்தின் நினைவாக’ என லத்தீன் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ்சுவரில், கொல்லப்பட்ட சுவிஸ் வீரர்களின் எண்ணிக்கையும் DCCLX=760, உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையும் CCCL=350, மற்றும் சில பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் பாதுகாவலர்கள்

கி.பி. 15 -ம் நூற்றாண்டு முதலாகவே, மத்திய சுவிட்சர்லாந்தில் இருந்த உயர்குடியினர் திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்து, திறமையான வீரர்களாக மாற்றுவதை முக்கியத் தொழிலாகச் செய்து வந்தனர். வீரர்களை, பிற நாட்டு அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் கூலிப்படைகளாக அனுப்பினர். செல்வத்தில் திளைத்தனர். இவ்வீரர்கள், பாதுகாப்புக் காவலர்களாகவும், ராணுவ வீரர்களாகவும் பல்வேறு நாடுகளில் பணியாற்றினார்கள். கால ஓட்டத்தில், கூலிப்படை பழக்கத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. கூலிப்படையாக வேலை செய்வதை குற்றச் செயலாக அறிவித்து 1848-ல் சட்டம் இயற்றியது சுவிஸ். தற்போது, வத்திக்கானில் மட்டுமே சுவிஸ் நாட்டினர் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்.

ஐஸ் ஃப்ளையர்

பனி மலையை நோக்கிப் பயணம்

‘முனகிக்கொண்டிருக்கும்’ சிங்கத்தைப் பார்த்த பிறகு, வெள்ளிப் பனி மலையின் மீதுலாவ விரைந்து நடந்தேன். கோயில் பாலத்தைக் கடந்து, தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் உள்ள வீதிக்குள் சென்றேன். முன்பதிவு படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கடைக்கு முன்பாக நின்றேன். எனக்கு முன்பே வந்தவர்களும் நின்றார்கள். பேருந்து வந்தது. டிட்லிஸ் (Titlis) மலைக்குச் செல்கிறவர்களின் தரவுகளைச் சரிபார்த்த வழிகாட்டி, ஒவ்வொருவராக பேருந்துக்குள் அனுமதித்தார். முதுகில் சுமந்திருந்த பையை பேருந்தின் அடியில் வைத்துவிட்டு, கடவுச் சீட்டு, தண்ணீர் போத்தல், மற்றும் பணம் வைத்திருந்த சிறிய பையை தோளில் தொங்கவிட்டுக்கொண்டு பேருந்தினுள் அமர்ந்தேன்.

சாலையோரம் மரங்கள் தலையசைத்து வழி அனுப்ப, கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சை வண்ணம் படர்ந்திருக்க, வழிந்தோடும் நீரும், சூரிய ஒளியில் தகதகக்கும் வயலும், பாய்ந்தோடும் முயலும் பயணத்தைக் கவிதையாக்கின. 40 நிமிடத்தில் டிட்லிஸ் நிலையம் சென்றோம். மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள மிக உயரமான மலைப்பகுதி டிட்லிஸ். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள டிட்லிஸ், சுற்றுலாப் பயணிகளின் மற்றோர் உலகம்.

சுற்றுலா நிறுவனம் ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கியிருந்ததால், நேரடியாக அரங்கத்துக்குள் சென்றோம். தானியங்கி இயந்திரத்தில் பார் கோடு காட்டி உள்ளே சென்று காத்திருந்தோம். 8 பேர் அமரக்கூடிய கம்பிவட ஊர்தி வந்தது. நான் தனி பயணி என்பதால், என் பெட்டியில் நான் மட்டுமே இருந்தேன். கதவு தாழிடப்பட்டது.

கம்பிவட ஊர்தி

கம்பிவட ஊர்தி

கீழே மண் பாதை. இருபுறமும் மரங்கள். மரங்களின் நடுவே உயரத்தில் பயணித்தது கம்பிவட ஊர்தி. கண் முன்னே தெரிந்தாள் வெண்பட்டுடுத்திய மலையரசி. சீதனம் சுமக்கும் உறவினர்கள்போல, போவதும் வருவதுமாக இருந்தன கம்பிவட ஊர்திகள். வனச் சாலைக்கு மேலே சென்று கண்களை விரித்து புன்னகையுடன் காட்சிகளை விழுங்கினேன், மலைச் சோலையில் மயங்கினேன். மேலே சென்ற வட ஊர்தி மறுபக்கத்தில் கீழ்நோக்கி மரங்களூடே இறங்கியது. நிலப்பகுதியில் செல்வதுபோல சென்று, மறுபடியும் உயரே சென்றது. நிலத்தோடும், மலையோடும் மரங்களோடும் பயணித்தேன். பறைகளுக்கிடையே ஓடும் நீரினையும், தெளிந்த தடாகங்களையும் பறவைபோல் கண்டு வியந்தேன். சுற்றிலும் மலை. பச்சை, கரும்பச்சை, வெண் பனி, வெளிர் மேகம், நீல வானம், குளிர் காற்று இவைதவிர வேறொன்றுமில்லை.

சுழலும் கம்பிவட ஊர்தி

சுழலும் கம்பிவட ஊர்தி

20 நிமிடங்கள் பயணித்து ஸ்டாண்ட் (Stand) எனும் இடத்தில் இறங்கினோம். அங்கிருந்து, உலகின் முதல் சுழலும் கம்பிவட ஊர்தியில் (Rotair) ஏறினோம். இடித்துக் கொண்டு நின்றோம். கதவு சாத்தியதும், சுழலும் ஊர்தி, எங்களை இன்னும் உயரே கொண்டு சென்றது. 5 நிமிட பயணத்தில் 360 டிகிரி கோணத்தில் மொத்த அழகையும் விழியால் முத்தமிட்டோம். செங்குத்தான பாறைகளின் முகத்தருகே பயணித்தோம். பனிப்பாறை பிளவுகளைக் கடந்தோம். பனித் திட்டுகள் நரம்புகள்போல படர்ந்திருக்கக் கண்டோம்.

டிட்லிஸ் உச்சி

கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும், டிட்லிஸ் மலையில் இறங்கினோம். சாக்லெட், கடிகாரம், ஐஸ் கிரீம் மற்றும் பரிசுப் பொருட்களுக்கான கடைகளும், உணவகங்கள், முதலுதவி மருத்துவமனை மற்றும் கழிவறை உள்ளிட்டவையும் 5 தளங்களில் உள்ளன. அரங்கை விட்டு வெளியேறினோம். இந்திய முகங்கள் நிறையவே தெரிந்தன. தமிழ் குரல் ஏதும் செவிபடவில்லை. ஷாருக்கான் மற்றும் காஜோல் கட் அவுட்கள் அங்கே இருந்தன. அதன் அருகில் நின்று பலரும் படமெடுத்தார்கள். பனி விரிந்த மலைக்காட்சியைக் கண்டு முதலில் பேருவகை கொள்வதைவிட, தங்கள் நடிகர்களின் உருவப்படங்களிலே பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

பனியில் நடந்தேன். ஷு மீது படிந்த பனி, ஈரத்தை பரிசளித்து உதிர்ந்து விழுந்தது. ஓடினேன். தாவினேன், எம்பிக் குதித்தேன். முகமெல்லாம் வெண் காற்று மோதியது. சில்லிட்ட விரல்களுடன் பனியை அள்ளி உயரே வீசினேன். கீழே விழுமுன் பிடித்து, தூர எறிந்தேன். சூரிய ஒளியில் மின்னியது சிதறிய பனி.

பனியைச் சுத்தம் செய்யும் கருவி

நெகிழிப் பலகைகள் நிறையக் கிடந்தன. பலகையின் முகப்பில் ஒரு கம்பு நீண்டிருந்தது பலகையில் அமர்ந்து, கம்பின் இருபக்கமும் கால்களை நீட்டி, பள்ளத்தை நோக்கி பனியில் சறுக்கினார்கள். ஆவலாய் நீல நிற பலகையை எடுத்தேன். உற்சாகமாக கத்திக்கொண்டு சறுக்கிச் சென்றேன். பலகையை எடுத்துக்கொண்டு நகரும் பலகையில் நின்று மேலேறிச் சென்று மறுபடியும் சறுக்கினேன். நிகழ்பொழுதைத் தவிர வேறெந்த எண்ணமும் எழவே இல்லை.

பாதைகளை பனி மூடிவிடக்கூடாதென சுத்தம் செய்துகொண்டிருந்தது இயந்திரம். கோடை வெயிலில் பனி விரைவில் உருகிவிடக்கூடாதென சில இடங்களில் பெரிய துணி விரித்துக் கட்டியிருந்தார்கள். பனி பாறையில் ‘தமிழ்’ என எழுதினேன். “ஏய் இங்கே பாரு?” தமிழ் கேட்டு திரும்பினேன். தமிழ் குடும்பம் நின்று புன்னகைத்தது. தமிழுக்கு அரணாக நின்று, குடும்பத் தலைவருடன் நிழற்படம் எடுத்தேன்.

தொங்கு பாலம்

தொங்கு பாலம்

சிறிது தூரம் நடந்து மற்றுமொரு இடத்துக்குச் சென்றேன். அங்கே, ஐஸ் ஃப்ளையர் (ice flyer) இருந்தது. கம்பிவட ஊர்தி போன்றதுதான். ஆனால், கதவுகள் இல்லை. ஊர்தியின் நிறுத்தத்தில் தயாராக நின்றேன். ஊர்தி வந்ததும், பெஞ்ச் போன்ற அதன் இருக்கையில் அமர்ந்து, நுகத்தடி ஒன்றை மேலிருந்து இறக்கி மடியில் வைத்துப் பிடித்துக்கொண்டேன். கால்கள் தொங்க கீழ் நோக்கிச் சென்றேன். அங்கே, இரண்டு மலைகளுக்கு இடையே ஐரோப்பாவின் மிக உயரமான தொங்குபாலம் (Cliff Walk suspension bridge) இருக்கிறது. 1 மீட்டர் அகலம், 98 மீட்டர் நீளம். தூண்கள் ஏதுமில்லை. படியேறிச் சென்று, தொங்கு பாலத்தில் நடந்தேன். கீழே பார்த்தேன். மரங்களற்ற பாறைகளும் அழகாய்த் தெரிந்தன. ஆட்கள் வேகமாக நடக்கும் போது பாலத்துடன் சேர்ந்து நானும் ஆடினேன். அச்சம் கலந்த அலாதி இன்பம்.

இயற்கையை இதயத்தில் ஏந்திக்கொண்டு லூசெர்ன் திரும்பினேன். சலுகை அட்டையைப் பயன்படுத்தி, பெர்ன் நகரத்துக்கு தொடர்வண்டியில் புறப்பட்டேன்.

(பாதை விரியும்)

பெட்டிச் செய்தி:

கூலிப்படைக்கு எதிர்ப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மறுமலர்ச்சிக்காக சுவிட்சர்லாந்தில் புரட்சி செய்தவர் உல்றிச் சுவிங்லி (Huldrych Swingly). பணமும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு பெருமளவு வருமானம் கொடுத்த, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுத்த கூலிப்படை முறையையும் சுவிங்லி எதிர்த்தார். “வெளிநாட்டு கூலிப்படையினர் உங்கள் நாட்டுக்குள் புகுந்து உங்கள் நிலங்களையும், புல்வெளிகளையும், வயல்வெளிகளையும், திராட்சைத் தோட்டங்களையும் நாசமாக்கினால் என்ன செய்வீர்கள்? உங்கள் கால்நடைகளைத் திருடி, உங்கள் மகன்களைக் கொன்று, உங்கள் மகள்களைக் கற்பழித்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். செல்வந்தர்கள் இதை ரசிக்கவில்லை. முரண்பாடு வலுத்தது. மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில், மறுமலர்ச்சி இயக்கம் பெருமளவில் வெற்றியடையாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

x