‘தர்மயுத்தம் இந்தி டப்பிங்கா?’


காலையிலேயே பாச்சா ரொம்பவும் நொந்துபோயிருந்தான். கண்ணாடியைப் பார்ப்பதும் கத்தரிக்கோலால் குறுந்தாடியை ட்ரிம் செய்வதுமாக இருந்தவன், அவ்வப்போது தலையைச் சிலுப்பிக்கொண்டு தனக்குள் முணுமுணுத்தபடி இருந்தான். கிண்டல் சிரிப்புடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த பறக்கும் பைக், “என்னப்பா... வழக்கமா ஒவ்வொரு பேட்டியையும் முடிக்கும்போதுத்தான் உயிர் போற மாதிரி உழட்டிட்டு இருப்பே இன்னிக்குக் குளிக்கிறதுக்கு முன்னாடியே குழப்பத் திலகமா இருக்கியே?” என்றது. “எல்லாம் ஒற்றைத் தலைமை பிரச்சினைதாம்பா. ஒரே ரோதனையா இருக்கு” என்று சலித்துக்கொண்டான் பாச்சா.

“ஆனாக்கா... ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், முதன்மை ஒருங்கிணைப்பாளர் மோடி(!)... இவங்களுக்குத்தானே பிரச்சினை?! உனக்கு என்ன சிக்கல்?” என்று கேட்டது பைக். தரையில் கிடந்த கருப்பு ‘டை’ டப்பாவை எடுத்த பாச்சா, “இதுல ரெண்டு ஐட்டம் இருக்குப்பா. ரெண்டையும் மிக்ஸ் பண்ணி தலையில அப்ளை பண்ணி... ஒரே இம்சையா இருக்கு. அதான் ஒற்றைத் ‘தலை-மை’ வேணும்னு சொன்னேன்” என்று பரிதாபமாகச் சொன்னான்.

“முன்னாடி மாதிரி முகத்தை மறைக்க மாஸ்க் கட்டாயம் போடுற நிலைமை வர்ற மாதிரி இருக்கு. தலைக்குத் தொப்பியும் தாடைக்கு மாஸ்க்கும் போட்டா வெள்ளை முடி பிரச்சினை தீர்ந்துச்சு. இதுக்குப் போய் ஓபிஎஸ் கணக்கா ஒரேதா சலிச்சுக்கிறியே...” என்று அதட்டியது பைக்.

அப்படியாக அன்றைய தினம் ஆரம்பமானது. முதலில் ஓபிஎஸ் இல்லம்.

ஆதரவாளர்களின் நலன் காக்க அதிகாலையிலேயே ஆலயங்களுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து திரும்பியிருந்த ஓபிஎஸ், அமைதியின் அடக்க வடிவமாக அமர்ந்திருந்தார். டெல்லியிலிருந்து செல்போன் அழைப்பு என்று உதவியாளர் சொன்னதும் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்தவர் இன்னும் கொஞ்சம் எக்கி நின்றபடி, “ஜி சொல்லுங்க ஜி. நீங்க இந்தியிலேயே பேசினாலும் சொல்வதெல்லாம் நன்மைன்னு புரியுது ஜி. நீங்க என்ன சொன்னாலும் ஓகே சொல்றேன் ஜி” என்று சொல்லிவிட்டு ‘கால்’ அதுவாக கட்டாகும் வரை காத்திருந்தார்.

“அப்ப தர்மயுத்தம், தாய் மீது சத்தியம்னு நீங்க ஓட்டுன படமெல்லாம் ஒரிஜினல் இல்லையா? இந்தி டப்பிங்கா?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான் பாச்சா.

ஒரு சலனமும் இன்றி அவனை ஏறிட்ட ஓபிஎஸ், “ஓபிஎஸ்-னாலே ‘ஒருபோதும் பொய் சொல்லாதவர்’னு தாம்பா அர்த்தம். அப்படியாப்பட்ட என்னை என் கூட இருக்கிறவங்களே நம்பிக்கையில்லாம பார்க்கிறதுதான் எனக்கு தர்மயுத்தமா... சாரி தர்மசங்கடமா இருக்கு” என்றார்.

“சரியா போச்சு போங்க! எதிர்க்கட்சித் தலைவர் யார்னு பிரச்சினை இருக்குதோ இல்லையோ, எதிர்க்கட்சிக்குள்ளே தலைவர் யார்ங்கிற பிரச்சினை அதிகமாவே இருக்கு போல. பேசாம அதிமுக மேற்பார்பார்வையாளரா அண்ணாமலையை அதிகாரபூர்வமாகவே அறிவிச்சிடலாமே?” என்று பாச்சா படீரெனக் கேட்டதும், “ஆடிட்டர்ல ஆரம்பிச்சு ஐபிஎஸ் வரை ஆளாளுக்கு ஆர்டர் போடுறதையெல்லாம் பொறுமையா சகிச்சிக்க வேண்டியிருக்கு. தனியா சைன் (sign) பண்ணவும் விட மாட்டுறாங்க... ஷைன் (shine) பண்ணவும் விட மாட்டுறாங்க. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு ஏன் இருக்கேன்னா...” என்று ஓபிஎஸ் முடிப்பதற்குள், “எல்லாம் தொண்டர்களைக் காப்பத்தணுமேங்கிற நல்லெண்ணம்தான் காரணம். அதானே?” என்றான் பாச்சா.

தொடர்ந்து, “இப்பெல்லாம் ஆளுங்கட்சியைப் பத்தி அநாவசியமா கேள்வி கேட்கத் தேவையில்லை. அதிமுகவுக்கும் சேர்த்து அண்ணாமலையே வேலை பார்க்கிறார். அப்புறம் என்ன, ஹாயா ஏதாச்சும் அறிக்கை விட்டுட்டு அமைதியா இருக்கலாமே? எதுக்குக் கட்சிக்குள்ளே இவ்வளவு கலவரம்?” என்றான் பாச்சா.

“அதுக்காகத்தான் என்னை மாதிரியே என் தொண்டர்களும் அமைதியா இருக்கணும்னு அக்கறையோட கேட்டுக்கிட்டேன். அதுல கூட ஏதோ உள்ளர்த்தம் இருக்கும்னு ஒரண்டை இழுத்து விடுறாங்க. தமிழ்நாட்டு மக்கள் தவிச்சுப் போய்டக் கூடாதுங்கிற அக்கறையில மோடி ஜி சொன்ன அட்வைஸைக் கேட்டு துணை முதல்வரானேன். இப்பவும் மோடி ஜி ஒரு பிரதமரா துணையா இருப்பார்னு நம்புகிறேன்” என்றார் ஓபிஎஸ்.

“சின்னம்மா சீக்கிரமா கட்சிக்குள்ள வரணும்னு சீக்ரெட்டா வேலை செய்றீங்களாமே? ஆடிட்டர் ஆணைப்படி தர்மயுத்தத்தையே அவங்களுக்கு எதிராத்தானே நடத்துனீங்க? ஆனாக்கா ஆறுமுகசாமி ஆணையத்துல ஆரம்பிச்சு, அதிமுக உயர்மட்டக் குழு வரைக்கும் அவங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பண்றீங்களே?” என்றான் பாச்சா. “தர்மயுத்தத்துக்குப் பின்னாடி எவ்வளவோ நடந்து, தவழ்ந்து(!) முடிஞ்சாச்சு. அதெல்லாம் பழைய கதை. இனியாவது எனக்குப் பக்கபலமா யாராச்சும் இருக்கணும்ல” என்று பாந்தமாகச் சொன்னார் பன்னீர்செல்வம்.

“எல்லாம் சரி சார். அதிமுக ‘பார்ட்டி’ன்னு சொல்றதைத் தவறா புரிஞ்சிக்கிட்டு ‘டிஜே’ எல்லாம் உள்ளே நுழைஞ்சுட்டாங்களாமே?” என்று பாச்சா கேட்க, ‘இது பத்தியெல்லாம் டெல்லில இருந்து டீட்டெய்ல் எதுவும் சொல்லலையே?’ என்று குழம்பிய ஓபிஎஸ், “அது யாருப்பா டிஜே?” என்று விசனத்துடன் வினவினார்.

“டி.ஜெயக்குமார் சார். அவரோட ஆதரவாளர்கள் போட்ட கோஷம் உங்க காதுக்குக் கேட்கலையா?” என்று பல்தெரியச் சிரித்தபடி சொன்ன பாச்சாவுக்கு உடனடியாக கெட்-அவுட் சொன்னார் பன்னீர்செல்வம்.

பட்டியலில் அடுத்து இருந்த பெயர் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

திமுக, அதிமுக, பாஜக எனப் பல்வேறு கட்சிகளுக்கு நிர்வாகிகளை ஏற்றுமதி செய்த ஏற்றமிகு கட்சி எனும் பெருமை கொண்ட தேமுதிகவின் கட்சி அலுவலகம். விஜய்காந்த் ரசிகர்கள், வெயிலுக்கு ஒதுங்கியவர்கள் எனப் பல தரப்பட்ட தொண்டர்கள் 15 பேர் கூடியிருக்க, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் பிரேமலதா.

“நாமதான் எதிர்க்கட்சிங்கிறதை நல்லா கவனத்துல வச்சுக்கிடணும். ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு மாதிரி கேள்வி கேட்பாங்க... அப்ப, இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவங்களை டயர்டாக்கிடணும். நம்ம கட்சியோட பலம் என்னான்னு பல கட்டப் போராட்டங்களை நடத்தி நிரூபிச்சிருக்கிறதா நான் பிரஸ்மீட்ல பேசிட்டு வந்திருக்கேன். புரியுதா?” என்று பிரேமலதா பேசிக்கொண்டிருந்தார்.

“நம்மளைத்தான் ஒரு மரியாதைக்குக்கூட யாரும் எதிர்க்க மாட்டேங்கிறாங்க... மதிப்பு கொடுத்து ஒரு மீம்ஸ் கூட போட்டுக் கலாய்க்க மாட்டுறாங்க... நாங்க யாரை எதிர்த்து அரசியல் பண்றது?” என்று துவண்டுபோன தொண்டர் ஒருவர் பிரேமலதாவைப் பார்த்து கேட்க, அந்த நேரம் பார்த்து பாச்சாவும் அங்கே பிரசன்னமானான்.

“என்ன மேடம் இது! தேர்தல் சமயத்துலதானே கூட்டணி பேரம்... சாரி பேச்சுவார்த்தைன்னு தேமுதிகவுக்குத் தெம்பு வரும்? இப்ப வழக்கத்துக்கு மாறா வான்டடா வண்டியில ஏறியிருக்கீங்களே... இப்ப நடக்கப்போறது குடியரசுத் தலைவர் தேர்தல். அதுக்கு உங்க கட்சிக்கு ஒரு எம்எல்ஏ-யாவது வேணும்ல?” என்று கேள்விகளை அடுக்கினான் பாச்சா.

பீறிட்ட கோபத்தை அடக்கிக்கொண்ட பிரேமலதா, “நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சின்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்கேன். ஊழலை ஒழிப்போம்னு சொன்ன முதல் தலைவர் கேப்டன். ரெண்டாவது தலைவர் நான். மூணாவது தலைவர் தம்பி சுதீஷ்தான். சரீங்களா? அதனால அண்ணாமலை ஊழலைப் பத்திப் பேசுறதையெல்லாம் நாங்க பெருசா எடுத்துக்க மாட்டோம்” என்றார்.

“அப்படீன்னா இனி நிஜமாவே அரசியல் செய்யப்போறீங்களா?” என்று பாச்சா பச்சாதாபத்துடன் கேட்க, சுள்ளென்ற கோபத்துடன் சுதீஷ் எழ... பேட்டி அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரும் வழியில், “ஏன்யா... அண்ணாமலைகிட்ட இன்னைக்குப் பேசலையே?” என்று பைக் கேட்க, “இப்பெல்லாம் செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்கணும்னு செந்தில் பாலாஜி லிஸ்ட் போட ஆரம்பிச்சுட்டார்ல. அவர் என்ன சொல்றார்னு முழுசா கேட்டுக்கிட்டு அடுத்த வாரம் அண்ணாமலையைப் பேட்டி எடுக்கலாம். ஒவ்வொரு நாளும் 38 மணி நேரம் அவர் பேட்டிதானே குடுத்துட்டு இருக்காரு?” என்றான் பாச்சா.

x