மேட்டூர்: மேட்டூர் அணையின் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக, அணையில் ரோகு, மிர்கால் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் 3.10 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டது.
தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை, சுமார் 60 சதுர மைல் பரப்புக்கு நீர் தேங்கக் கூடிய அளவுக்கு பிரம்மாண்டமானது. இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு, 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசனத்துக்காக அணையில் ஆண்டு முழுவதும் நீர் தேக்கப்படுவதால் அணையில் மீன் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது.
அணையில் கிடைக்கும் மீன்கள், மேட்டூர் அணையில் மீன்பிடி உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் காவிரி நெடுக, மீன் வளம் பெருக்கடைந்து, கரையோர மாவட்ட மீனவர்களுக்கும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த நிலையில், அணையில் மீன் வளத்தை பெருக்குவதற்காக மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப் பாட்டில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.
அதன்படி நடப்பாண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இன்று 3.10 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மண்டல மீன்வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியம், சேலம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உமா கலைச்செல்வி, மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கவிதா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தருமபுரி மண்டல மீன்வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியம் கூறியதாவது: "மேட்டூர் அணை 15 ஆயிரத்து 346 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனர். அணையில் மீன் உற்பத்தியைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டும் ஆண்டு தோறும் மீன் குஞ்சுகள் விடப்படுகிறது.
நடப்பாண்டில், முதல் கட்டமாக 1.72 லட்சம் ரோகு, 1.38 லட்சம் மிர்கால் என மொத்தம் 3.10 லட்சம் மீன் குஞ்சுகள் தற்போது விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 1 கோடி மீன் குஞ்சுகளை விடுவதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு 1 கோடி மீன் குஞ்சுகள் விடப்படும்" என்றார்.