முற்போக்கு இலக்கிய உலகுக்கு மாபெரும் இழப்பு: எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி மறைவு


கு.சின்னப்பபாரதி

நாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு. சின்னப்பபாரதி (88) உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

நாமக்கல் - மோகனூர் சாலை முல்லை நகரைச் சேர்ந்தவர் முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி (88). இடதுசாரி சிந்தனைகளை கொண்ட எழுத்தாளர். செம்மலர் இலக்கிய பத்திரிகையை தொடங்கியவர்களில் ஒருவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கிய தலைவர்களில் ஒருவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக கடைசி வரை வாழ்ந்தவர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே 1952-ம் ஆண்டில் கொல்லிமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் ஆதிவாசி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்றது. அதை சங்கம் என்ற நாவல் மூலமாக மிக அற்புதமாக வெளிப்படுத்தியவர் கு.சின்னப்பபாரதி.

தாகம், பவளாயி, சர்க்கரை, சுரங்கம் என அவருடைய நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான களத்தை, அதன் ஆழத்தை பேசுகிற தலைசிறந்த நாவல்கள். உழைப்பாளி மக்கள் பக்கம் நின்று சோசலிச யதார்த்தவாத இலக்கியத்தை படைத்த மிக முக்கியமான படைப்பாளி அவர்.

இவரது நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்ச், டேனிஷ், சிங்களம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி என இந்திய மற்றும் வெளிநாடு என பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மூலம் வழங்கப்பட்ட பொற்கிழி விருது உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சின்னப்பபாரதி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவு முற்போக்கு இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது உடல் இன்று நாமக்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

x