சோழவரத்தில் 14-ம் நூற்றாண்டு கழு மர சிற்பம் கண்டெடுப்பு: ஆரணி வரலாற்று ஆய்வாளர் தகவல்


சோழவரம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கழு மர சிற்ப நடுகல். | மற்றொரு நடுகல்லில் அம்பு எய்த நிலையில் போர் வீரர் உள்ளது போன்று காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை: கலசபாக்கம் வட்டம் சோழவரம் கிராமத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கழு மர சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆரணியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருமான ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்: "போளூர் - செங்கம் சாலையானது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த சாலையாகும். நெடுங்காலமாகவே கர்நாடகப் பகுதியிலிருந்து பல மன்னர்கள், செங்கம் கணவாய் வழியாகவே வந்து போர் புரிந்துள்ளனர். சோழர் காலம் தொடங்கி திப்புசுல்தான் காலம் வரையில், இந்த சாலையானது பல படையெடுப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததுள்ளது.

இதன் தாக்கம், போளூர் - செங்கம் சாலையை ஒட்டி அமைந்துள்ள சோழவரம் கிராமத்திலும் எதிரொலிக்க செய்துள்ளது என்பதை, இக்கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 2 நடுகற்கள் உறுதி செய்கின்றன. திருவண்ணா மலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட சோழவரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அருகே இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் ஒன்று சோழர் காலத்தைச் சேர்ந்தது. இந்த நடுகல், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போரில் இறந்த வீரன் ஒருவனுக்காக வைக்கப்பட்டதாகும். இதில் வீரன் ஒருவன் எதிரியை நோக்கி அம்பு எய்த நிலையில் காணப்படுகிறார். சுமார் 2 அடி அகலமும், 3 அடி உயரமும் கொண்ட கற்சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ள வீரனின் உருவத்தில் நீண்ட தலைமுடியானது, பின்பக்கமாக காற்றில் பறந்தவாறு உள்ளது.

அந்த வீரன் தனது இடுப்பில் சிறிய ஆடையை அணிந்தவனாகவும் காணப்படுகிறார். இது ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட நடுகல் சிற்பமாகும். மேற்கண்ட நடுகல்லுக்கு அருகிலேயே மற்றொரு நடுகல் உள்ளது. இது, கழு மர தண்டனை பெற்ற போர் வீரனின் சிற்பமாகும். இது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கழு மர சிற்பங்கள் மிகவும் அரிதாகவே கிடைத்துள்ளன.

போளூர் அருகே உள்ள படைவீடு கிராமத்தில் நான்கு கழுமர நடுகற்கள் உள்ளது. இவை, படையெடுப்பில் தோற்றுப்போன சம்புவராயர் படைவீரர்களை, தேடிப்பிடித்து வெற்றிபெற்ற விஜயநகர படையினரால் கழுவேற்றப்பட்டதன் அடையாளங்களாகும். சோழவரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிற்பமும், அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்.

கழு மர சிற்பமானது சுமார் 4 அடி உயரமும், ஒன்றறை அடி அகலமும் கொண்டதாகும். இதன் மேற்பகுதியில் வீரன் ஒருவன் கழுமரத்தின் கூரிய முனையால் குத்தப்பட்டு இருப்பதுபோல் காணப்படுகிறான். அவன் தனது வலது கையில் ஒரு கத்தியை தூக்கிப் பிடித்திருக்கும் காட்சியானது, மரணத்திலும் வீரத்தை வெளிப்படுத்துவது போல் உள்ளது.

அந்த உருவமானது, விரிந்த தலைமுடியும், இடையில் ஆடையுடன் காணப்படுகிறது. கழுமரத்தின் அடிப்பகுதி மிக நீளமாக காட்டப்பட்டுள்ளது. கீழ்ப் பகுதியில் பிற்காலத்து எழுத்துகள் செதுக்கப்பட்டுள்ளன. அவை, மிகவும் சிதைந்து போய் உள்ளன. கழு மர தண்டனைகள் என்பது விஜய நகர மன்னர்களின் ஆட்சிக் காலம் வரையில், தமிழர் பகுதியில் நடைபெற்று வந்தது என்பதற்கு பல வரலாற்று ஆதாரங்களும் உள்ளன" என தெரிவித்துள்ளார்.