பழுப்பு நிலக்கரி திட்டம் வரவில்லை... 25 ஆண்டுகளுக்கு பிறகு நிலம் ஒப்படைப்பு: மகிழ்ச்சியில் விவசாயிகள்


ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, 26 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படாததால், நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கவும், அதன் அருகிலேயே தலா 800 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு கடந்த 1996-ம் ஆண்டு ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டது.

இதற்கு விலையாக வழங்கப்பட்ட ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் தொகை குறைவானது என கூறிய விவசாயிகள், தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. நிலக்கரி திட்டமும் தொடங்கப்படவில்லை.

இதனால் பழுப்பு நிலக்கரித் திட்டத்தை தொடங்க வேண்டும், இல்லையெனில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து விவசாயிகளின் நிலங்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதில், மேலூர் மற்றும் இலையூர் (மேற்கு) தவிர மற்ற 11 கிராமங்களில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிய உரிமையாளர்கள், அவர்களது வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைக்கவும், கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மீதோ வழக்கு தொடரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கையெழுத்து பெற்று நிலங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே நிலங்களை திரும்ப ஒப்படைக்க அறிவிப்பு வெளியானதை அறிந்த 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

x