மூச்சு நிக்கிறவரைக்கும் முழுமனசா செய்யணும்!


வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பது புறநானூற்று செய்யுள் வரி. அப்படித்தான், தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதரவற்ற ஜீவன்களுக்கு 28 ஆண்டுகளாக உண்டி கொடுத்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி.

74 வயதிலும் தன்னலம் கருதாத இந்த சேவையைத் தொடரும் வசுந்தராவை திருப்பரங்குன்றம் அருகே வசந்த நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். தனியாளாக கையில் வாக்கருடன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். இசை ஆசிரியையான வசுந்த்ரா, தீவிர சாய்பாபா பக்தர். நண்பர் ஒருவர் பரிசளித்த ‘அற்புதம் 60’ என்ற சாய்பாபா குறித்த நூலைப் படித்த பிறகு தான், உயிருள்ள வரை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் (நாராயண சேவை) என்ற எண்ணம் தனக்குள் உதித்ததாகச் சொல்கிறார் வசுந்தரா.

”எளியோருக்கு உணவளிக்கும் என்னோட விருப்பத்தைச் சொன்னதுமே என் கணவர் கிருஷ்ணமூர்த்தி மறுப்பேதும் சொல்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார். இத்தனைக்கும் எனக்கு குறைவான சம்பளம் தான். எங்களுக்கு பிள்ளைகள் இல்லை. அதனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கலாம் என தீர்மானித்து இறங்கினோம். ‘கடைசி வரைக்கும் உன்னோட இந்த சேவைக்கு நான் துணையா இருப்பேன் வசுந்த்ரா’ன்னு அடிக்கடி அவரு சொல்லிட்டே இருப்பார். அப்படித்தான் இருந்தார்.

‘குழந்தைங்களுக்கு சமையல் ஆயிடுச்சா... ஆட்டோ எத்தனை மணிக்கு வரும்?’ இதுதான் அவர் கடைசியா என்னிடம் பேசிய வார்த்தைகள். உயிர் போகும் சமயத்திலும் அவர் இந்த விஷயத்தில் எனக்கு துணையாய் இருந்திருக்கிறார். அதற்காக, அவர் போன பின்னாடி நான் இந்த சேவையை நிறுத்திடல. அவர் பங்குதாரரா இருந்த நிறுவனத்துல இருந்து மாசம் 10 ஆயிரம் ரூபாய் வரும். அதில் என்னுடைய செலவுகள் போக எஞ்சிய பணத்தை அப்படியே நாராயண சேவைக்கு போட்டுருவேன்.

இதுக்காக நான் யாரிடமும் கையேந்துனதில்லை. ஆனா, சிலபேர் தங்களோட பிறந்தநாள், திருமண நாள் மாதிரியான நாட்கள்ல இங்க வந்து பணம் குடுத்துட்டுப் போவாங்க. அதை வெச்சுத்தான் சமையல்காரர், வேலை ஆட்கள், டெலிவரி ஆட்டோ உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியுது" என்று கூறினார்.

சமையல்கூடத்தில்...

மேலும் அவர் கூறுகையில், "கரோனா காலத்துல குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம்னு 5 இடங்களுக்கு சுழற்சி முறையில சாப்பாடு குடுத்தோம். இதில்லாம, திருப்பரங்குன்றம் பகுதியில இருக்கிற ஏழைகளுக்கு ஞாயிறு தோறும் மாலையில நானே நேரில் போய் உணவளிக்கிறத வழக்கமா வெச்சிருக்கேன். தீபாவளி மாதிரியான பண்டிகை நாட்களில் கையில் பணம் மீதமிருந்தால் யாருக்காச்சும் புதுத் துணி எடுத்துக் குடுப்பேன். ‘உங்களுக்கே உதவிக்கு இன்னொருத்தர் தேவைப்படுற இந்த வயசுல இதுக்கு மேலயும் இந்த சேவையைத் தொடரணுமா?’ன்னு சிலர் கேட்கிறார்கள். ஆனா, அவரு எப்படி கடைசி வரைக்கும் இந்த சேவையில ஆர்வமா இருந்தாரோ அதே மாதிரி நாமளும் மூச்சு நிக்கிற வரைக்கும் முழுமனசா இதைச் செய்யணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம்” என்று வியக்க வைக்கிறார் வசுந்தரா.

திருப்பரங்குன்றத்தில் உணவளிக்கப்படுகிறது...

வசுந்தராவின் சேவைகளை நீண்ட காலமாகக் கவனித்துவரும் விஷ்வேஷ்பாபு நம்மிடம் பேசுகையில், ”கடந்த 25 வருசமா இவங்கள எனக்குத் தெரியும். ஆரம்பத்துல இவங்க மட்டும் தனியாளா இந்த சேவையைச் செஞ்சுட்டு இருந்தாங்க. இப்ப, சத்ய சாய் அமைப்பில் இருந்து 10 பேர் தன்னார்வ உதவிக்கு வர்றாங்க. உடலாலும், மனதாலும் தனக்கு எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டைகட்டி வெச்சுட்டு இந்த சேவையை இன்முகமா செஞ்சுட்டு வர்றாங்க வசுந்தராம்மா” என்றார்.

இயலாத ஜீவன்களுக்கு உதவ இயற்கை இந்த அன்னைக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!

x