தூய்மையான மருத்துவமனைகளில் பழநி ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம்


பழநி: தூய்மையான மருத்துவமனைகளில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் உள்ள தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் "காயகல்ப்" விருது வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார திட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மருத்துவ மனையில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம், மருத்துவ கழிவு மேலாண்மை, நோய் பரவலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பழநி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 99.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காயகல்ப் விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிரசவ கால சேவைகள், குழந்தைகள் நல சேவைகள், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் என 12 வகையான சேவைகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.