சிறகை விரி உலகை அறி-52: பன்மைத்துவ நகரம்


கால்வாய்

பரிசுகளால் பிணைக்கப்பட்டுள்ளன உறவுகள். பயணம் சொல்லி கும்பிடுகையில் பெரியவர்கள் தரும் பணம், பயணம் சென்றவர்கள் வாங்கி வரும் பரிசு, பிறந்தநாளில் நண்பர்கள் தரும் ஆச்சரியம், குடும்ப நிகழ்வுகளில் எழுதப்படும் மொய் போன்ற குருதிக் குழாய்களால் பிணைந்து இயங்குகின்றது உறவுத் தமனி.

அப்பாவுக்கு கடிகாரம், அம்மாவுக்கு திறன்பேசி, எனக்கு யூரோ கொடுத்து ஹம்பர்க் தொடர்வண்டி நிலையத்தில் டாட்டா காட்டினார் நண்பர்.

போதை பழக்கம்

இரவில் ஒளிரும் வான் பற்களைப் பார்த்த விழிகள் களைத்தபோது உறங்கினேன். நெதர்லாந்து நாட்டின் நிஜ்மேகன் நகரத்தில் அதிகாலை 5.15 மணிக்கு இறங்கினேன். தொடர்வண்டி நிலையத்திலிருந்து வெளியேறி நெதர்லாந்தில் வாழும் நண்பரின் வருகைக்காகக் காத்திருந்தேன். ஏறக்குறைய 10 இளைஞர்கள் நடை தடுமாறி சாலையில் சென்றார்கள். நடைமேடையில் சிலர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் போதையில் இருப்பதை பாதையில் அறிந்தேன்.

நெதர்லாந்தில் போதை பொருட்கள் வைத்திருப்பதும், விற்பதும் சட்டத்துக்கு புறம்பானது. ஹெராயின், கொகய்ன் உள்ளிட்ட அதிக போதை தரும் பொருட்கள் விற்பதற்கு அனுமதி இல்லை. ஆனாலும், ‘Coffee shops’ கடைகளில் மென் போதை பொருட்கள் விற்பனை செய்வதை அரசு அனுமதிக்கிறது. காஃபி ஷாப் என்பது, சில விதிமுறைகளுடன் கஞ்சா விற்கப்படும் இடமாகும். வீட்டில் 5 மரிஜுவானா செடிவரை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வளர்க்கவும் அனுமதி உண்டு.

முடிக்கற்றைகளில் குளிர் நடும் காற்றிலிருந்து தப்பிக்க குளிராடைகள் அணிந்து, காய்ந்து வெடித்த உதடுகளுடன், வாகனமற்ற சாலையில் நின்றபோது நண்பர் அருகில் வந்தார். கூர்ந்து பார்த்தார். “டேய்! நீ தானடா?, வேறு யாரோ நிற்கிறதா நினைத்தேன். அதுதான், வேறு பக்கம் போய்ப் பார்த்தேன். இதென்ன கோலம். சூட்கேஸெல்லாம் இல்லையா?” என்று கேட்டார். அதிக தூரம் நடப்பதற்கு ஏதுவான ஷு, முதுகில் தொங்கும் பையை மழை நீர் ஈரப்படுத்தாதிருக்க போர்த்தப்பட்ட பச்சை நிற துணி ஆகியவற்றைப் பார்த்த அவர், அக்கேள்வியை கேட்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.

மிதிவண்டி நிறுத்தம்

மிதிவண்டி நகரம்

நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தலைநகர் ஆம்ஸ்டர்டாம் புறப்பட்டோம். ஆம்ஸ்டர்டாமில், மிதிவண்டி நிறுத்துவதற்கான இடமே என் கவனத்தை முதலில் கவர்ந்தது. எப்பக்கம் பார்த்தாலும் மக்கள் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். நண்பர் சொன்னார், “ஒவ்வொரு வருடமும், மிதிவண்டி திருட்டுப் போனதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் இங்கே பதியப்படுகின்றன.” இணையத்தில் தேடினேன். 11 லட்சம் பேர் வாழும் ஆம்ஸ்டர்டாமில் மட்டுமே, ஒவ்வோர் ஆண்டும் 50 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் மிதிவண்டிகள் திருடப்படுவதாக ஆம்ஸ்டர்டாம் காவல்துறையும், மிதிவண்டி ஓட்டுவோர் சங்கமும் கணித்துள்ளனர். அதிலும் 58 சதவீத மிதிவண்டிகள், உரியவரின் வீட்டுக்கு முன்பு திருடப்படுகிறது.

கால்வாய்

படகு சவாரி

சில கோயில்களுக்கு அழைத்துச் சென்றபிறகு, கால்வாயில் படகு சவாரி செய்ய நண்பர் நுழைவுச் சீட்டு வாங்கினார். பயண நேரம் 60 நிமிடங்கள். முக்கியமான இடங்களைப் பற்றிய தகவல்களை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அந்தந்த இடங்களைக் கடக்கும்போது குரல்பதிவைக் கேட்கலாம். அப்படித்தான் ஆன் ஃபிராங் மறைந்திருந்த வீட்டைக் கடந்தபோது, அவரைப்பற்றிய தகவலைக் கேட்டறிந்தேன்.

ஆன் ஃபிராங்

ஆன் ஃபிராங்

ஜெர்மனியின் ஃபிராங்பர்ட்டில் 1929 ஜுன் 12-ல் ஆன் ஃபிராங் பிறந்தார். தந்தை பெயர் ஓட்டோ. ஆன் பிறந்தபோது ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. யூதர்களால்தான் ஜெர்மானியர்களுக்கு வேலையில்லை என்று கொக்கரித்து வெறுப்பை விதைத்தார் ஹிட்லர். விளைவாக, ஓட்டோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான யூதர்கள் வேலை இழந்தார்கள். நாட்டை விட்டு வெளியேறினார்கள். ஆன் ஃபிராங்கின் குடும்பமும், ஆம்ஸ்டர்டாமில் 1933-ல் தஞ்சமானார்கள். ஆன் 13-வது பிறந்தநாள் கொண்டாடியபோது, வெற்றுத்தாள்களுடன் ஒரு புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அதில், தன் அன்றாட நிகழ்வுகளைக் குறித்து வைக்கத் தொடங்கினார் ஆன்.

ஆன் ஃபிராங் மறைந்திருந்த அறை

நாஜிக்கள் ஆம்ஸ்டர்டாமையும் கைப்பற்றியதால், யூதர்களால் வெளியில் வரவும், நகரை விட்டு வெளியேறவும் இயலாத சூழல் ஏற்பட்டது. பிள்ளைகளைக் காக்க நினைத்த ஓட்டோ, தன் கடைக்குப் பின்புறம் மறைவிடம் ஒன்றை தயார் செய்தார். அதில் நான்கு அறைகள், ஒரு குளியலறை, பரண் இருந்தது. அப்பா, அம்மா, ஆன், சகோதரி மார்க்கட் ஆகியோருடன் மேலும் நான்குபேர் தங்கினார்கள். ரகசிய இடத்தை மறைக்க நகரும் புத்தக அலமாரி செய்தார் தந்தை. யாருடனும் சத்தமாக பேச இயலாது, சூரிய ஒளி கிடையாது, வெறுமை, தனிமை, பயம், எதிர்காலமற்ற வாழ்வு அனைத்தையும் குறிப்பேட்டில் எழுதினார் ஆன்.

மறைந்திருந்தவர்களை ஆகஸ்ட் 4, 1944-ல் கைது செய்த நாஜி படையினர் ஆஸ்விட்ச் வதை முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அக்டோபர் மாதம், ஆன் மற்றும் சகோதரி மார்க்கட் இருவரையும் பெர்கன் பெல்சன் முகாமுக்கு மாற்றினார்கள். அங்கே, பசியாலும் நோயாலும் 15 வயதில் ஆன் இறந்தார்.

ரகசியமாக வாழ்ந்த 8 பேரில் ஓட்டோ மட்டுமே உயிர் தப்பினார். 1942-1945 வரை ஆன் எழுதிய குறிப்புகள் அவருக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு, 1947 ஜுன் மாதம் ‘ரகசியப் பதுங்கிடம்’ ( The Secret Annex) என்னும் பெயரில் புத்தகமாக வெளியானது. 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகம் போரின் குரூர அனுபவத்தை அறிவிக்கிறது.

குறுகலான பாலம்

பல்வேறு பாலங்களைக் கடந்துசென்றோம். அவற்றுள் முக்கியமானது, ‘குறுகலான பாலம்’ (Magere Bridge - Skinny Bridge). உயரம் குறைவாக, 13 வளைவுகளுடன் 1691-ல் கட்டினார்கள். பழுதாகியபோதெல்லாம் மறுபடியும் கட்டினார்கள். தற்போது இருப்பது 1934-ல் கட்டப்பட்ட பாலம். வாகனங்கள் சென்று வருகின்றன. கப்பல் வருகிறபோது, பாம்பன் தொடர்வண்டி பாலம் திறப்பதுபோல, கப்பல்களுக்காக இப்பாலமும் இரண்டாக பிரிகிறது. முதுகும் சமமான இருக்கையும் உள்ள, இரண்டு மர நாற்காலிகள் முன் பக்கம் ஒட்டி இருப்பதுபோல கற்பனை செய்யுங்கள். முதுகுப் பகுதி தரையில் படும்வரை, இரண்டையும் அப்படியே பின்னோக்கிச் சாயுங்கள். மறுபடியும் தூக்கி வையுங்கள். அப்படித்தான் இப்பாலம் திறந்து மூடுகிறது.

இப்பாலத்தில் நின்று, காதலர்கள் தங்கள் காதலை அறிக்கையிடுவது பாரம்பரியமாக நடக்கிறது. இப்பாலத்தின் அடியில் பயணிக்கும்போது முத்தம் கொடுத்தால் தங்கள் காதல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் எனவும் காதலர்கள் நம்புகிறார்கள்.

நினைவுத் தூண்

டாம் சதுக்கம்

படகு சவாரி முடிந்து, டாம் சதுக்கத்துக்குள் நடந்தோம். இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக 22 மீட்டர் உயரமுள்ள தேசிய நினைவுச் சின்னம் இங்கேயுள்ளது. 1956 மே 4 அன்று திறக்கப்பட்ட நினைவுத் தூண், 2009-ல், தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அரண்மனை உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சதுக்கத்தைச் சுற்றிலும் உள்ளன. ஹம்பர்க்கில் பார்த்தது போலவே, தங்களையே ஒப்பனை செய்து பயணிகளை மகிழ்வித்து நன்கொடை பெறும் கலைஞர்களை இங்கும் பார்த்தேன்.

சிவப்பு விளக்கு

உலகம் முழுக்கவே பல்வேறு நகரங்களில் சிவப்பு விளக்குப் பகுதி இருந்தாலும். ஆம்ஸ்டர்டாமில், நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. “அங்கே பார்” என்றார் நண்பர். இரண்டு உள்ளாடைகள் மட்டும் அணிந்த பெண்கள் சிலர் கட்டிடத்தின் ஓரத்தில் சிறிது உயர்த்தப்பட்ட மேடையில் ஒயிலாக நின்றார்கள். ஒவ்வொருவருக்கும் இடையே மறைப்புச் சுவர் உண்டு. விரும்புகிறவர்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து உள்ளே செல்லலாம். அதன் அருகிலேயே, சிற்றின்ப அருங்காட்சியகம் (Erotic museum) இருக்கிறது. உள்ளே சென்று வரலாற்றை அறிந்துகொள்ள ஆசை. நண்பருடன் சென்றதால், கூச்சமாக இருந்தது. செல்லவில்லை.

உணவும் பிரிவும்

மாலையில் நண்பரின் வீட்டுக்குத் திரும்பினோம். தவளைக் கறியுடன், இரவு உணவை ருசித்துச் சாப்பிட்டோம். இரவு 10 மணிக்கு, இருள் சூழாத வீதியில் மிதி வண்டியில் சென்றோம். எங்களுக்கு முன்னே இளைஞர்கள் சிலர் மிதிவண்டியில் சென்றார்கள். மறுநாள் நண்பரின் நண்பர்களைப் பார்த்தேன்.

மாலையில், ஃபிளிக்ஸ் பேருந்தில் (FlixBus) ஏறுவதற்காக நெஜ்மேகன் தொடர்வண்டி நிலையத்துக்குத் திரும்பினோம். பேருந்து எந்த இடத்தில் அல்லது சாலை ஓரத்தில் நிற்கும் என்பது இருவருக்குமே தெரியவில்லை. வாகனத்தை, வாகன நிறுத்தத்தில் நிறுத்தினால் பணம் செலுத்த வேண்டும் என்று சொன்ன நண்பர், ஓரிடத்தில் இறக்கிவிட்டு, “நீயே பார்த்து போய்விடு” எனச் சொல்லிவிட்டு போய்விட்டார். பேருந்துக்கு இன்னும் 10 நிமிடம் இருந்தது. சுற்றிலும் பார்த்தேன். தூரத்தில், தாழ்வான பகுதியில் ஃபிளிக்ஸ் பேருந்து ஒன்று நின்றது. நான் செல்லும் பேருந்து எந்த இடத்தில் நிற்கும் என அறிய சென்றேன். அவர்களோ, “இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து, நாங்கள் சீக்கிரம் வந்துவிட்டோம்” என்றார்கள். “நல்லவேளை வந்து கேட்டோம்” என்று நினைத்தபடி, உற்சாகமாக ஏறி அமர்ந்தேன்.

(பாதை விரியும்)

பெட்டிச் செய்தி:

ஆன் ஃபிராங்கின் குறிப்பேட்டிலிருந்து…

’நமக்குள் எழும் கனவுகளும் நம்பிக்கைகளும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மையான உலகில் நசுக்கப்படுவது சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கடினமானதாக இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் அவை நடைமுறைப்படுத்த வாய்ப்பேயில்லாத அபத்தமானவையாக இருந்தாலும் கைவிடவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவற்றைக் கைவிடாமல் வைத்திருப்ப்பதற்கான காரணம், என்ன நடந்தாலும் மனிதர்கள் அவர்களுடைய மனதளவில் நல்லவர்கள் என்று நம்புகிறேன்.’

x