வீட்டுக்கே வரும் சேவைகள்: புதிய பாணி வேலைகளுக்கும் ஒழுங்கு விதிகள் அவசியம்


புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு உற்பத்தி - விநியோக முறைகளிலும் உலகம் மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்துவந்த மோட்டார் வாகன உற்பத்தி போன்றவற்றில் இயந்திர மனிதர்கள் – செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைக் கணினிகளால் கட்டுப்படுத்தி உற்பத்தி செய்வதால், ஆயிரக் கணக்கு என்பது நூற்றுக்கணக்காகச் சுருங்கி வருகிறது. இதற்காக முதலீடுகளைப் பல மடங்கு உயர்த்த வேண்டும் என்றாலும் மனிதர்களை – அதாவது தொழிலாளர்களை - வேலைக்கு அமர்த்துவதைக் குறைப்பதற்காக எத்தனை லட்சங்களையும் கோடிகளையும் கூடுதலாகச் செலவு செய்ய பெருந்தொழில் நிறுவனங்கள் முன்வருகின்றன.

இதற்கு முதல் காரணம், உற்பத்தியை லட்சக்கணக்கில் மேற்கொள்ள இயந்திரமயம் வெகுவாக உதவுகிறது. துல்லியமாக, மூலப் பொருட்களை வீணடிக்காமல் தயாரிக்க முடிகிறது. குறித்த காலங்களில் ஏற்றுமதி செய்யவும் முகவர்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிகிறது. எனவே கண்காணிக்கவும் உற்பத்திப் பணியைத் திட்டமிடவும் அமல்படுத்தவும் உயர் நிலையில் பொறியாளர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

சேவைத் துறை

உற்பத்தித் துறைதான் இப்படி என்றால் சேவைத் துறையிலும் ஆட்குறைப்பு அல்லது ஆள் எடுப்பு குறைப்பு நிரந்தர அம்சமாகிவிட்டது. பல பன்னாட்டு நிறுவனங்கள் மிகப் பெரிய சரக்கு கிடங்குகளைக் குளிர்சாதன வசதிகளோடு பெருநகரங்களில் அமைத்துக்கொண்டு அங்கிருந்து மொத்த விலையிலேயே நுகர்வோரின் வீடு தேடி அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுக்கிறது. இதனால் வீதிக்கு வீதி விற்றுவந்த சிறிய அளவிலான பலசரக்குக் கடைகள் உட்பட பல பாரம்பரிய வணிக நிறுவனங்கள் விற்பனை இழப்புகளைச் சந்திக்கின்றன. சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட், மால்கள் மக்களை அதிகம் ஈர்க்கின்றன.

தயார் உணவு, சிற்றுண்டி, கொரிப்பதற்கான பண்டங்கள், முழு அளவுச் சாப்பாடு, இனிப்பு-கார வகைகள். சாக்லேட், குளிர்பானம், மென்பானம், ஐஸ்கிரீம் போன்றவையும் வீடு தேடிச் சென்று விற்கப்படுகின்றன. இதைப் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி உள்ளூரின் நடுத்தர நிலை உணவகங்களும்கூட கடைப்பிடிக்கின்றன. பல ஊர்களில் கேட்டரிங் சர்வீஸ் நடத்துவோர் வீடுகளில் நடைபெறும் சிறிய அளவு சுப நிகழ்ச்சிகளுக்குக் காலையில் சிற்றுண்டி – காபி, மதியமானால் சுவையான சாப்பாடு, இரவில் விதவிதமான பலகாரங்கள் என்று தயாரித்து வீடுகளுக்கே கொண்டு சென்று பரிமாறுகின்றனர். இதனால் நிகழ்ச்சி நடக்கும் வீடுகளில் சமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. சமைக்கும் கேட்டரிங் நிறுவனங்களுக்குப் பரிமாறுவதற்கு இடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை, வாடிக்கையாளர் சொல்லும் இடங்களில் கொண்டுபோய் பரிமாறிவிடலாம்.

இந்தப் புதிய ஏற்பாடுகள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் அள்ளித்தருகின்றன. சமீபத்தில் இப்படிப்பட்ட உணவு தயாரிப்பு – விநியோக நிறுவனம், நீங்கள் ஆர்டர் செய்தால் போதும் சடுதியில் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து சேவையளிப்போம் என்று விளம்பரம் செய்தது. அப்படியென்றால் சேவைப் பணியாளர் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரப் போக்குவரத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மின்னல் வேகத்தில் பறந்தால்தான் முடியும் என்று பலரும் எதிர்ப்புகளைக் கிளப்ப, அந்த நிறுவனம் விளம்பர வாசகத்தை மாற்றியது.

அதற்குப் பிறகும் இந்த வகை தொழில், சேவை மீது அரசின் கவனம் அதிகம் திரும்பியதாகத் தெரியவில்லை. படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்கள், குறைந்த அளவே படித்துவிட்டு வாகனம் ஓட்டிப் பழகியவர்கள் என்று பலருக்கும் இந்த வேலைகள் தாற்காலிக நிவாரணமாக இருக்கிறது. ஒரு வேலையைவிட்டு இன்னொரு வேலைக்கு மாறுவதற்கு முன்னால் சிறிது காலம் இடைக்கால வேலையாகவும் பலர் இவற்றைத் தேர்வுசெய்கின்றனர்.

அரசு பாதுகாப்பு அவசியம்

இந்தத் தொழில்களைக் கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விபத்துக் காப்புறுதி, சுகாதார காப்புறுதி ஆகியவை செய்யப்படுவது அவசியம். அவர்களுடைய வயது, கல்வித்தகுதி போன்றவை திரட்டப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தரப்படும் ஊதியம், படிகள், வேலை நேரம் ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும். நிறுவனம் அவர்களைத் தன்னிச்சையாக வேலையைவிட்டு நீக்கினால் அவர்களுக்கு ஊதிய நிலுவை போன்றவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை இதற்கேற்ப திருத்த வேண்டும். அவர்களுக்கு சமூகநல பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பாரம்பரியமான தொழில்கள், அரசு ஊழியர்கள், அரசுத் துறை நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக அதிகம் குரல் கொடுக்கின்றன. அமைப்பு சாராத ஊழியர்களுக்காகத் தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அவற்றின் பேரம் பேசும் சக்தி குறைவாகத்தான் இருக்கிறது. ஏழைகள், தொழிலாளர்கள் நலனில் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் எந்தக் கட்சியும் ஆளும் கட்சியானவுடன் இந்தத் துறை குறித்தோ இதில் பணிபுரிவோர் குறித்தோ அக்கறை காட்டுவதில்லை என்பதே கடந்த இருபதாண்டு கால வரலாறு.

ஆள் பற்றாக்குறை

சில வேளைகளில் இத்தகைய தொழில்களில் ஏற்படும் முரண்களை அந்தந்தத் துறைகளில் நடக்கும் நிகழ்வுகளே திருத்துவதும் உண்டு. உணவை வீடுகளுக்கே கொண்டுவந்து சேர்க்கும் துறையில் சமீபத்தில் ஆள் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. அதற்குக் காரணம் நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களை விரட்டி விரட்டி வேலை வாங்குவதும், குறைந்த அளவே ஊதியம் தருவதும்தான். சில நிறுவனங்கள் சாப்பிடக்கூட நேரம் தராததால் டெலிவரிக்கு எடுத்துச் சென்ற உணவையே பசிக்கு சிலர் சாப்பிட்ட காட்சிகளும் வைரலாக்கி நெஞ்சை உருக்கின. உணவு டெலிவரி நிறுவனங்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது எல்லோருக்குமே காலை, மதியம், மாலை, இரவு என்ற உணவு நேரம் ஒன்றாகவே இருப்பதால் அந்த நேரத்தில் பணியாளர்களுக்கு ஓய்வுதர முடிவதில்லை, அவர்களாலும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட முடிவதில்லை என்று காரணம் கூறின. இது உண்மையாக இருந்தாலும்கூட இதற்கொரு தீர்வு காண்பது அவசியம்.

வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் அனைவரையும் பாதிக்கும் வேளையில் இந்த வேலைகளுக்கு வரும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த பணிவரன்முறை, காப்புறுதித் திட்டங்கள் போன்றவற்றை அரசு அமல்படுத்துவது அவசியம். இதை அரசுதான் செய்ய வேண்டும் என்றில்லை, அந்தந்த நிறுவனங்களே ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஆள் பற்றாக்குறை நிச்சயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில வகை சேவைத் துறைகளில் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க வேலைக்கு அமர்த்துவோரைத் தங்களுடைய ஊழியர்களாகவே கருதும் போக்கு இல்லை. இது மாற வேண்டும். அவர்களை ஒப்பந்தப் பணியாளர்களாகவோ முகவர்களாகவோ மட்டும் கருதி வேலை முடிந்ததும், அவர்களைக் கையைக் கழுவிவிடும் மன நிலையே நிர்வாகங்களிடம் காணப்படுகிறது. இதனால் அவர்கள், ஊழியர்களைத் தக்கவைக்க மெனக்கெடுவதில்லை. இதன் விளைவுதான் ஆள் பற்றாக்குறை.

கழிவறைத் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்துவது உயிரையே வாங்கக்கூடிய வேலை என்று தெரிந்தும் இன்னும் ஏராளமானோர் பாதாளச் சாக்கடைக் குழிகளிலும் கழிவுநீர்த் தொட்டிகளிலும் இறங்கத் தயாராக இருக்கின்றனர். அசம்பாவிதம் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டும் அது நம் கவனத்தைப் பெறுகிறது. எஞ்சியவை ஓசைப்படாமல் தொடர்கின்றன.

மளிகை சாமான்களை, சமையல் எரிவாயு சிலிண்டர்களை, நாளிதழ்களை, தின்பண்டங்களை, காய்கறிகளை வீடுகளுக்கே கொண்டு வந்து தருவது நகரங்களையொட்டிய கிராமப்புறங்களுக்கும் பரவி வருகிறது. இந்தத் துறைக்கு வேலைக்கு வருவோரில் மிகச் சிலர் சமூக விரோதிகளாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அவர்கள் வீட்டில் உள்ளோருக்குத் தீங்கு இழைத்த பிறகு அவர்களைப் பற்றிய பூர்வோத்திரங்களைத் திரட்டுவதை விட, முன்கூட்டியே அவர்களைப்பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு சரிபார்த்து பிறகே வேலைக்கு அமர்த்துவதும் நிறுவனங்களின் கடமையாகும்.

வாடகைக் கார் நிறுவனங்கள்

ஊபர், ஓலா போன்ற வாடகைக் கார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்ட ஒப்புக்கொள்ளும் பல ஓட்டுனர்கள், தங்களுக்குத் திரும்பு சவாரி கிடைக்காது என்று கருதினால் அந்தப் பகுதிகளுக்கு ஓட்ட மறுத்துவிடுகின்றனர். இதை நேரடியாகச் செய்யாமல் முகவரியைத் திரும்பத் திரும்பக் கேட்டு, இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைப் போல பாவனை செய்து, கடைசியில் அவரை அழைத்தவரே, வேண்டாம் நான் வேறு ஆளை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல வைக்கின்றனர். அவராக துண்டித்தால் வாடகைக் கார் உரிமையாளருக்கு வருவாய் இழப்பு என்பதால் இந்த இழுத்தடிப்பு நாடகம் என்கிறார்கள். இவையெல்லாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடும்போதே எதிர்பார்த்திருக்க வேண்டியவை. அரசும் வாடகைக் கார் நிறுவனங்களும் இந்த சேவைக் குறைபாடுகளை உடனுக்குடன் கவனித்து சரி செய்ய வேண்டும்.

கோவிட் 19 பெருந்தொற்று பொது முடக்கம் கைவிடப்பட்டு அனைவரும் பள்ளி – கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலைகளுக்குத் திரும்பிவிட்டனர் என்றாலும் வீட்டிலிருந்தே வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல வீடுகளில் உள்ளவர்களும் தங்களுக்குத் தேவைப்படுவதை வீட்டுக்கே வரவழைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே இந்தத் துறையை வலுப்படுத்தவும் அதில் வேலை செய்வோரின் குறைகளைத் தீர்க்கவும் நுகர்வோரின் நலனையும் உரிமைகளையும் காக்கவும் அரசு உரிய சட்டங்களை இயற்றி கண்காணிப்பது அவசியம். இதை ஒன்றிய அரசுதான் என்றில்லாமல் மாநில அரசுகளும் மேற்கொள்ளலாம்.

x