சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு சங்கம் சார்பில் சூழலியல் பெருநடை @ சென்னை


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு சங்கம் சார்பில் பள்ளிக்கரணை முதல் மேடவாக்கம் வரை நடைபெற்ற சூழலியல் தொடர்பான பெருநடை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில், மேடவாக்கத்தில் நடைபெற்ற சூழலியல் பெருநடை நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் ஒருங்கிணைப்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ”நமது நிலம் நமது எதிர்காலம்” என்ற பெயரில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி, சூழலியல் பெருநடை (வாக்கத்தான்) இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.இந்தப் பெருநடை நிகழ்வை, சென்னை பள்ளிக்கரணை தாமரைக்குளம் பகுதியில், மேடவாக்கம் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் தொடங்கி வைத்தார்.

பெருநடையில், நமது நிலம் நமது எதிர்காலம், ஈர நிலங்களைப் பாதுகாப்போம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மாசடைவதை தடுத்து நிறுத்தி மீட்டெடுப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம், நீர்வரத்துக் கால்வாய்களை பாதுகாப்போம், உலகம் வெப்பமடைவதை தடுப்போம், நெகிழி உபயோகம் தவிர்ப்போம் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.

பெருநடையில் பங்கேற்றவர்கள் இறுதியாக, காயிதே மில்லத் கல்லூரிக்கு வந்த பின், கல்லூரி செயலாளர் தாவூத் மியாகான் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதன்பின், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பள்ளிக்கரணை தாமரைக்குளம் பகுதியில் இருந்து மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி வரை நடைபெற்ற இந்த பெருநடை நிகழ்வில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ். மோகன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர், டிஎன் எஸ்எப், சிஓய்சி, யுனைட், எஸ்.சி.ஆர்.டபிள்யூ.ஏ, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ( டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், காயிதே மில்லத் கல்லூரி, எம்சிசி கல்லூரி, முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.ஐ.வி.இ.டி. ஆகிய கல்லூரிகளின் நாட்டு நலப்பணி இயக்கத்தினர், குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்கள், மத்திய, மாநில ஓய்வூதியர்கள், தொழிற்சங்கத்தினர், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள், காமாட்சி அம்மாள் நினைவு மருத்துவமனை, பார்வதி மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள் , பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.