காற்றாலை, சூரியசக்தி மூலம் தினசரி மின்தேவையை பூர்த்தி செய்த மின்வாரியம்


சென்னை: காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிகளவு மின்சாரம் கிடைத்தால் தினசரி மின்தேவை எளிதாக பூர்த்தி செய்ய முடிந்ததாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தினசரி மின்சாரத் தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ளது. இது மழைக் காலத்தில் 9 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தும், கோடையில் 18 ஆயிரம் மெகா வாட் வரை அதிகரித்தும் காணப்படும். இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கியதால் மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்தது. அத்துடன், ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றதால் தினசரி மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்தன.

குறிப்பாக, தமிழகத்தின் மின்தேவை கடந்த மே 3-ம் தேதியன்று மிக அதிகபட்சமாக 20,830 மெகா வாட் என்ற அளவை எட்டி புதிய உச்சத்தை அடைந்தது. தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் 9,019 மெகாவாட் திறனில் காற்றாலை, 8,116 மெகாவாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. மேலும், கடந்த மே மாதம் முதல் காற்றாலை சீசன் தொடங்கி உள்ளது.

அதேபோல், சூரிய சக்தி மின்சாரமும் அதிகளவில் கிடைக்கிறது. காற்றாலைகளில் தினமும் சராசரியாக 8 கோடி யூனிட்டுகளும், சூரியசக்தி மின் நிலையங்களில் 4 கோடி யூனிட்டுகளும் மின்சாரம் கிடைக்கிறது. இவை தவிர, மத்திய அனல், அணுசக்தி கழகத்திடம் இருந்து 9.42 கோடி யூனிட்டுகளும், மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் இருந்து 7.64 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஆண்டு தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20 ஆயிரம் மெகா வாட்டைத் தாண்டியது. சொந்த உற்பத்தியை தவிர காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்னுற்பத்தி மூலம் அதிகளவு மின்சாரம் கிடைத்ததால் தினசரி மின் தேவை எளிதாகப் பூர்த்தி செய்ய முடிந்தது" எனக் கூறினர்.