சிறகை விரி உலகை அறி-51:நீர் சூழ் நகரம்


கோயிலும் மணிக் கோபுரமும்...

கலையாத மேகங்கள் வான் முகம் மூடியிருக்கும் அதிகாலை, சுடுநீரில் குளித்து விடுதியிலிருந்து வெளியேறினேன். இரவெல்லாம் முத்தமிட்டும் இலைகளை விட்டு விலகவில்லை பனித்துளிகள். காற்றின் ஈரப்பதம் சுவைக்க சூரியனின் நாக்குகள் இன்னும் நீளவில்லை. முகம் சிலிர்த்த மலர்களின் வெட்கம் குறையவில்லை. சாம்பல் நிற பகல் கண்களைத் தழுவியது. உடல் சூடு உண்ண ஊதக்காற்று ஆடைத் துவாரங்களில் முன்னேறியது. உதடு குவித்து காற்றில் வெண்கோலம் வரைந்து நடந்தேன்.

பேருந்து நிறுத்தத்துக்குச் செல்லும் வழியை வரவேற்பறை பெண் ஏற்கெனவே வரைந்து கொடுத்திருந்தார். வலது பக்கம் நடந்து, மறுபடியும் வலப்பக்கம் திரும்பிக் காத்திருந்தேன். அடுத்த 2 மணி நேரத்தில் விமானத்தில் அமர்ந்திருந்தேன்.

குறைந்த எடை நிறைவான பயணம்

ஒரு மாத கால ஐரோப்பிய பயணத்தை, 8 கிலோ எடையுடன் தொடங்கியதை வாசித்த (27-வது கட்டுரை) வாசகர் ஒருவர், “பையின் எடை, வெறும் 8 கிலோதானா?” என்று கேட்டார். “ஆமாம், ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு, கருத்தரங்கில் பங்கேற்க அங்கிருந்தே அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால், கோட், பேன்ட்ஸ், நிகழ்ச்சிக்கான ஷு, தினமும் நடப்பதற்கான ஷு, கழிவறை சென்றுவர மடக்கு காலணி, தண்ணீர் போத்தல், குடை, வெயிலுக்குக் கண்ணாடி, முதலுதவி மருந்துகள், மற்றும் அடிப்படைப் பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்தே 8 கிலோதான்” என்றேன். வியந்து பார்த்தார்.

சுற்றுலா செல்கிறவர்கள், எண்ணெய், பவுடர், ஷாம்பு, சோப்பு, வாசனை திரவியம் கொண்டு செல்வதற்காகவே எடை குறைந்த நெகிழி போத்தல்கள் விற்கின்றன. ஒரு போத்தலின் எடை சில கிராம்கள்தான். மிகவும் எடை குறைவான பேன்ட் மற்றும் சட்டைகள் கிடைக்கின்றன. எளிதில் காய்ந்துவிடும். சிறிய இடத்தில் எப்படி பல்வேறு பொருட்களை அடுக்கி வைப்பது என்கிற தகவல்கள் யூடியூப் தளங்களில் உண்டு. Backpacking விடுதியிலேயே, வாஷிங் மிஷினில் 1 அல்லது 2 யூரோ செலுத்தி, துணி துவைக்கும் வசதிகள் இருக்கின்றன. இலவசமாகவே துணிகளைத் தேய்த்து அணியலாம்.

ஹம்பர்க் நகரம்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பயணத்தின்போது, எடை குறைவான பை உள்ளவர்கள், இணையம் வழியாக பயணத்தை உறுதி செய்துவிட்டு குடியேற்ற அதிகாரியிடம் செல்லாமல் நேரடியாக விமானத்துக்குச் சென்றுவிடலாம். விமான பயணத்தின் விலை குறைவுதான். ஆனால், விமானத்தில் எண்ணெய், நகவெட்டி கொண்டு செல்ல சில நாடுகள் அனுமதிக்காது என்பதாலும், ஆங்காங்கே வாங்கிய நினைவுப் பொருட்கள் பையில் இருந்ததாலும், பரிசோதனை செய்யும் ஒவ்வோர் இடத்திலும் எடுத்துக் காட்டச் சொல்லுவார்கள் என்பதாலும், எடைக்கும் சேர்த்தே நான் பணம் செலுத்தியிருந்தேன். விமானம் புறப்பட்டது. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இறங்கினேன்.

சூரியகாந்தி - கலைஞர்

சிரிக்கும் சூரியகாந்தி

அழைத்துச் செல்ல, பல ஆண்டுகால குடும்ப நண்பர் வந்திருந்தார். நட்பார்ந்த புன்னகையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, சூரியகாந்தி பூவின் நடனம் என்னைக் கவர்ந்தது. பச்சை உடை உடுத்தி, கைகளில் இலைகள் மாட்டி, முகத்தில் சூரியகாந்தி பூச்சூடி தொட்டியின் மீது கலைஞர் ஒருவர் நின்றார். ஒலிக்கும் பாடலுக்கேற்ப மெல்ல நடனமாடினார். நன்கொடை அளிப்பவர்களுக்காக, அருகிலேயே சிறு கூடை இருந்தது. அதில் சூரியகாந்தி மலரொன்று சிரித்தது.

புனித மிக்கேல் அதிதூதர்

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

வீட்டில் குளித்து, மதிய உணவு சாப்பிட்டு, ஆடைகளைத் துவைத்து, சிறிது உறங்கிய பிறகு, ஹம்பர்க் நகரின் அடையாளங்களுள் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் சென்றோம். கல்லறைக் கூடத்தின் மீது கோயில் நிற்கிறது. 1669-ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில், 1750-ம் ஆண்டு மின்னலில் எரிந்து அழிந்தது. மறுபடியும் கட்டினார்கள். 1906-ல் ஊது விளக்கில் (Blowlamp) ஏற்பட்ட நெருப்பில் சாம்பலானது. திரும்பவும் கட்டினார்கள். இரண்டாம் உலகப் போரில் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளானதால் தற்போது புனரமைத்துள்ளார்கள்.

கீழ்தளத்தில் கல்லறைக் கூடம்...

ஹம்பர்க் நகரின் பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்கள், ஆரம்பத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களாக இருந்துள்ளன. கி.பி. 16-ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் தொடங்கிய மறுமலர்ச்சி கருத்தியலைப் பின்பற்றியவர்கள், கத்தோலிக்க ஆலயங்களை புராடெஸ்டான்ட் ஆலயங்களாக மாற்றினார்கள். ஆனால், இந்த ஆலயத்தை புராட்டெஸ்டான்டுகள் புதிதாகக் கட்டி புனித மிக்கேல் அதிதூதருக்கு அர்ப்பணித்தார்கள். கடவுளின் எண்ணற்ற தூதர்களுள் ரபேல், கபிரியேல், மிக்கேல் மூவரும் அதிதூதர்கள் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

சதுரக் கற்கள் பதிக்கப்பட்ட சாலையில் நடந்து கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் முகப்பில், சிறிது உயரத்தில், சாத்தானைக் காலில் மிதித்து ஈட்டியால் குத்திக் கொல்லும் புனித மிக்கேலின் வெண்கலச் சிலை கம்பீரமாக நிற்பதைப் பார்த்தோம்.

மணிக் கோபுரம்

இக்கோயிலில், 132 மீட்டர் உயரமுள்ள மணிக் கோபுரம் உள்ளது. கோபுரத்தின் 4 திசைகளிலும் மிகப்பெரிய கடிகாரம் இருக்கிறது. நிமிட முள் மட்டுமே 4.91 மீட்டர் நீளம். அருகிலேயே ஓடும் எல்பே (Elbe) நதியில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இக்கோபுரம் திகழ்கிறது. விரும்புகிறவர்கள் 452 படிகள் நடந்து மேலே செல்லலாம். 10-வது மாடி வரை, அதாவது 109 மீட்டர் உயரம் வரை மின்தூக்கி உள்ளதால் நாங்கள் நடக்கவில்லை. மின்தூக்கி உயரே செல்லும்போது, அருகில் உள்ள திரையில், எத்தனையாவது மாடி, பயணிக்கிறவர்களின் மொத்த எடை ஆகியவற்றுடன், பெட்டியின் தட்பவெப்பத்தையும் பார்த்தேன். கடிகார முள் சுற்றுவதற்கு உதவும் கடிகாரத்தின் உட்புறம் பிரமிக்கச் செய்தது.

10-வது மாடியில் இறங்கி, கோபுரத்தைச் சுற்றி நடந்து கட்டிடங்களின் அமைப்பையும், நிறங்களையும் கண்டு ரசித்தேன். ஆங்காங்கே இருந்த தொலைநோக்கிகளில் விழிகளைப் பொருத்தி தூரத்து அழகை விழியருகே கண்டேன். துறைமுகமும், பெரிய கப்பல்களும், சரக்கு பெட்டிகளும் உற்சாகம் அளித்தன. பிறகு, கோயிலுக்குள் சென்று, பீடத்தையும், மிகப்பெரிய 5 இசைக்கருவிகளையும் (Organ) பார்த்துவிட்டு வெளியேறினோம்.

சுரங்கப் பாலம்

சுரங்கப் பாலம்

பழமையான கட்டிடத்துக்குச் சென்றோம். மரக் கதவுகள் இருந்தன. கதவு திறந்தது. நடுவில் தார் சாலை போலவே இருந்தது. உள்ளே சென்றோம். கதவு அடைக்கப்பட்டது. 23.5 மீட்டர் கீழே சென்றதும், மறு திசையில் கதவு திறக்கப்பட்டது. வெளியில் வந்தபிறகு பார்த்தேன், மொத்தம் 6 மின் தூக்கிகள் இருந்தன, மேலிருந்து, நடந்தே கீழே வருவதற்கும் படிகள் உள்ளன. நதியின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்காக 1911 செப்டம்பர் 7-ல் இச்சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது. சுவரில் இருந்த குறிப்பில், மேலே, 12 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் ஓடுகிறது என்றிருந்தது.

6 மின்தூக்கிகளில் நடுவில் உள்ள 4

மின் தூக்கிகளைப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பினேன். 6 மீட்டர் விட்டம் உள்ள இரண்டு சுரங்கப் பாதைகள் இருந்தன. ஒவ்வொன்றின் நீளம் 426.5 மீட்டர். சுரங்கத்துக்குள் மக்கள் நடக்க பாதைகள் ஓரத்தில் உள்ளன. நடுவில் உள்ள பாதையில் ஆரம்ப காலத்தில், குதிரை வண்டிகள் சென்றன. தற்போது மிதிவண்டி மற்றும் வாகனங்கள் செல்கின்றன. 1970-களில் நிறைய பாலங்களும் சுரங்கங்களும் கட்டப்பட்டபின், முக்கிய சுற்றுலாத்தலமாக இவ்விடம் மாறியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இதன் வழியே எல்பே ஆற்றின் அடியில் பயணிக்கின்றன.

எல்பேபில்ஹார்மோனிக்

இசையரங்கம்

இசையரங்கம்

தேநீர் அருந்திவிட்டு, எல்பேபில்ஹார்மோனிக் (Elbphilharmonie) இசையரங்கம் சென்றோம். 110 மீட்டர் உயரமுள்ள இக்கட்டிடத்தில் 25 மாடிகள் உள்ளன. கடைகள், உணவகங்கள், தங்குமிடங்கள் இருக்கின்றன. கீழிருந்து மேலே செல்ல நுழைவு கட்டணம் இல்லை. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் எண்ணிக்கை ஒழுங்குக்காகவும், இலவச நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். இணையத்திலும் வாங்கலாம். நண்பர் வாங்கி வந்ததும், படிபோல இல்லாமல், தளம்போல அமைந்துள்ள 82 மீட்டர் நீள எஸ்கலேட்டரில் நின்று, 37 மீட்டர் உயரம் சென்றோம். அங்கே, மிகப்பெரிய சதுக்கம் உள்ளது. சதுக்கத்திலிருந்து வெளியே பால்கனிக்குச் சென்று துறைமுகம், நதி, நகரம் மற்றும் கப்பல்களை 360 டிகிரி கோணத்தில் ரசித்தோம். மிகப் பிரம்மாண்டமான இசையரங்கத்தை நிழற்படத்தில் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

(பாதை விரியும்)

துறைமுகம்

பெட்டி செய்தி:

அறிவியலின் அற்புதம்

சுரங்கப்பாலத்தில், துறைமுக நிர்வாகத்தின் குறிப்பை வாசித்தேன். ‘எல்பே நதியின் தெற்குக் கரையில் வேகமாக வளர்ந்து வரும் துறைமுகத் தொழில் நகரத்தை இணைக்க செயின்ட் பால் எல்பேடன்னல் (St. Pauli Elbtunnel)) கட்டப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், கப்பல் கட்டும் தளத்துக்கும் கப்பல்துறைக்கும் வேலைக்குச் செல்ல பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் எல்பே ஆற்றைக் கடக்க மிகவும் துயரப்பட்டார்கள். படகுகளால் பல்லாயிரம்பேரை சமாளிக்க இயலவில்லை. பனி மூட்டமும், உறைந்த நீரும் கூடுதலாக கஷ்டப்படுத்தியது. தொழிலாளர்கள் நேரத்துக்கு வர இயலாததால் துறைமுகம் நட்டத்தைச் சந்தித்தது. ஊதியம் வெட்டப்பட்டதால் மக்களுக்கும் கஷ்டம். எனவே நதியின் இக்கரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல, இந்தச் சுரங்கப்பாலம் கட்டப்பட்டது. காயமடைந்த பணியாளர்களை உடனடியாகத் துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் உதவியது. 6 டன் எடை சுமக்கக்கூடிய 2 சரக்கு மின் தூக்கிகள். 10 டன் எடை சுமக்கக்கூடிய வாகனங்களுக்கான 2 மின்தூக்கிகள் மற்றும் பயணிகளுக்கான 2 மின்தூக்கிகள் இங்கே உள்ளன.’

x