நிழற்சாலை


காதல் நிமித்தம்

அவ்வளவு எளிதாக இல்லை

இந்த ஊடலைக் கடப்பது

நத்தை ஓட்டின் சுழிகள் எனச்

சுழன்றபடியே உன் நினைவுகள்!

- கி.சரஸ்வதி

எதார்த்தம்...

நிலமெல்லாம்

படுத்துறங்குகிறது நிழல்

வலிக்க வலிக்க

ஒற்றைக்காலில்

நிற்கிறது மரம்.

- சாமி கிரிஷ்

இருப்பு

மூத்தவன் வீட்டு

குடும்ப அட்டையிலும் இருக்கிறார்

இளையவன் வீட்டு

குடும்ப அட்டையிலும் இருக்கிறார்

முதியோர் இல்லத்தில் இருக்கும்

அப்பா.

- பாரியன்பன் நாகராஜன்

தரிசனம்

‘கைய வெளியே

நீட்டாதீங்க' என்கிறது

பேருந்திலொரு குரல்


‘சைடு ஸ்டாண்ட' பாருங்க

என முகங்காட்டாமல்

கடக்கிறது மற்றொரு குரல்


கவனிக்கத் தவறும்

பொழுதுகளில்

அவ்வப்பொழுது

வந்துவிட்டுத்தான்

செல்கிறார் கடவுள்!

- ரகுநாத் வ

சொல்லில் அடங்கா வனம்

பிடரியுள்ள புலி

தும்பிக்கை கொண்ட முயல்

கொம்போடு காகம் என

அகிலம் பார்க்காத

அத்தனை ஜீவராசிகளும்

குழந்தை வரைதலுக்கு

குதூகலமாய் வளைந்துகொடுத்து

வந்தமர்ந்துவிட

கடைசிவரை

முடியவேயில்லை ஒரு மனிதனை

மனிதனாகவே வரைந்திட!

- கோவை.நா.கி.பிரசாத்

அன்பின் மணம்

மல்லி கிலோ

ஆயிரம் ரூபாய் தம்பி

வாங்கி விக்க முடியல

முழம் நூறு ரூபா

சங்கடப்படாம வாங்கிட்டுப்போங்க

என்று சொல்லிவிட்டு

ஒரு முழத்தோடு

கனகாம்பரத்தையும் நறுக்கிக்கொடுக்கும்

பூக்காரப் பாட்டியின் பேரன்பில்

மல்லிகையைவிட

அதிகம் மணத்துக்கிடக்கிறது கனகாம்பரம்!

-நேசன் மகதி

வறுமையின் ஓலம்


இன்முகத்தோடு வரவேற்று

புன்முறுவலோடு வழியனுப்பும்

அப்பெரியவருக்கு

சிலர் காசு கொடுப்பர்

பலர் கண்டும் காணாமலும் செல்வர்

வணக்கங்களைச் செலுத்தி

வாகனங்கள் திரும்பிச் செல்ல

மனமகிழ்வோடு அவர் அடிக்கும்

விசில் சத்தத்தில்தான்

கேட்டுக்கொண்டே இருக்கிறது

வறுமையின் ஓலம்

ஒவ்வொரு நாளும்.


- காமராஜ்

பதைப்பு...


ஊர் கூடி

தேரிழுக்க

ஒய்யாரமாக

அமர்ந்திருக்கும்

கடவுள்

கூட்டம் அதிகமாக

சற்றே நிமிர்ந்தமர்கிறார்

பக்தர்களுக்கு

எதுவும்

ஆகிவிடக் கூடாதென்ற

பதைப்புடன்!

- கா.கவிப்ரியா

x