தேனியில் கனமழை - அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை


தேனி: தேனி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்துக்கு மே 19-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 20-ம் தேதி அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் கனமழை பெய்யத் தொடங்கி யுள்ளது.

இதனால் கண்மாய், குளங்கள், ஊருணிகளில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளது. மேலும் முல்லை பெரியாறு, கொட்டக்குடி, வைகை ஆறு, மூலவைகை, வராகநதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே பெற்றோர் தங்களது குழந்தைகளை நீர்நிலைப் பகுதியில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கூறியதாவது: வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன்பு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 43 பகுதிகள் கண்டறியப்பட்டு அவை கண்காணிக்கப்பட்டு வரு கிறது. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களை தங்கவைக்க 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப் பட்டு தயார் நிலையில் உள்ளன.

வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை (04546) 250101 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அங்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x