சேலம்: சாக்கடை குப்பையை சாலையில் கொட்டும் அவலம்


சேலம் டவுன் கருவாட்டு பாலத்தில் இருந்து எருமாபாளையம் செல்லும் சாலையோரம் உள்ள சாக்கடையில் தூர் வாரப்பட்டு, அதன் குப்பை சாலையில் கொட்டப்பட்டது. இதனால், கழிவு நீர் சாலை முழுவதும் வழிந்தோடியதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்: சேலம் டவுன் கருவாட்டுப் பாலம் அருகே சாக்கடையில் இருந்து அகற்றப்பட்ட குப்பை, கழிவு நீரோடு சாலையில் கொட்டப்பட்டதால், அந்த சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி, மக்கள் கடும் இன்னலை ஏற்படுத்தி உள்ளது. கழிவு நீரை வடிகட்டும் தொட்டி அமைத்து, தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாநகராட்சியில், டவுன் கருவாட்டுப் பாலம் அருகே எருமாபாளையம் சாலையோரம் இருந்த சாக்கடையில் தூர் அகற்றும் பணி, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சாக்கடையில் இருந்து அகற்றப்பட்ட குப்பை யாவும், சாலையோரத்தில் ஆங்காங்கே கொட்டப் பட்டது. குறிப்பாக, கழிவு நீரோடு குப்பை சாலையோரத்தில் கொட்டப்பட்டது. இதனால், குப்பையில் இருந்த வடிந்த கழிவு நீர் சாலை முழுவதும் பரவி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், சாலை முழுவதும் கழிவு நீர் பரவி இருப்பதால், அதன் மீது நடந்து செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், இரு சக்கர வாகனங்களை சாலையின் மீது இயக்கியவர்கள், சாலையில் வழுக்கி கீழே விழுந்துவிடுவோம் என்று அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர். சாலையில் வாகனங்கள் சென்றபோது, கழிவு நீர் தெறித்து, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது பட்டதால், மக்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: பொதுவாக, சாக்கடையை தூர்வாரும்போது, அதில் உள்ள குப்பையை கழிவு நீரோடு அள்ளியெடுத்து, சாலையோரத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாக போடுவதை, உள்ளாட்சி அமைப்புகள் வழக்கத்தில் வைத்துள்ளன. இதனால், குப்பையில் இருந்து வழிந்தோடும் கழிவு நீர், அந்த பகுதி முழுவதும் பரவிவிடுவதால், சாலை, வீதியை மக்கள் சில நாட்கள் வரை கடும் அவதியுடன் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. மேலும், கழிவு நீரோடு சாலையில் கொட்டப்படும் குப்பையின் ஈரம் உலரும் வரை, குப்பை அங்கேயே கிடக்கும்.

இந்த குப்பையை நாய்கள், பறவைகள் உள்ளிட்டவை கிளறும்போது, அந்த குப்பை சாலை முழுவதும் பரவி, மீண்டும் சுகாதாரக்கேடு உருவாகிறது. எனவே, இதுபோன்ற அவலநிலை ஏற்படுவதை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். குறிப்பாக, சாக்கடையில் இருந்து குப்பையை அகற்றி, கொட்டும் இடத்தில், வடிகட்டி போன்ற தொட்டியை வைத்து, அதில் குப்பையை கொட்ட வேண்டும். இதன் மூலம் குப்பையில் இருந்து வடியும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடாமல், சாக்கடையிலேயே மீண்டும் கலக்கச் செய்ய வேண்டும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் குப்பை சாலை முழுவதும் சிதறாமல் இருப்பதுடன், அதனை அகற்றுவதும் மிக எளிதாக இருக்கும். சுகாதாரமான இந்த நடைமுறைக்கு மாறுவதற்கு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றனர்.