கேரளாவில் பறவை காய்ச்சல், வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு


கூடலூரிலுள்ள சோதனைச்சாவடியில் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள்.

கூடலூர்: கேரளாவில் பறவை காய்ச்சல், வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவதையடுத்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தாக்கி ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் இறந்தன. இதைத்தொடர்ந்து அம்மாநில அரசு, பண்ணைகளில் உள்ள வாத்துகளை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்திருப்பதால், கால்நடை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கி ஒருவர் இறந்ததையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் தமிழக எல்லையை ஒட்டி உள்ளதால், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி கால்நடை துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன் கூறும்போது, ‘‘நீலகிரி எல்லையில் கேரளாவுக்கு செல்லும் 8 சாலைகள் உள்ளன. இந்த எட்டு சாலைகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு, 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பிறகுதான் அனுமதிக்கப்படும். கோழி எச்சம் மற்றும் கழிவுகள் கொண்டு சென்ற வாகனங்கள் திரும்பி வந்தால் அனுமதிக்கப்படமாட்டாது. பறவை காய்ச்சல் கிருமிகள் 90 நாட்களுக்கு பிறகுதான் அழியும் என்பதால், இந்த கண்காணிப்பு தொடர்ந்து 90 நாட்கள் இருக்கும்.

அதேபோல், கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதிகளில் காய்ச்சல் உள்ள நபர்கள் வந்தால் பரிசோதித்து அனுப்பப்படுவார்கள். இதற்காக மருத்துவ குழுவினர் சோதனைச்சாவடிகளில் முகாமிட்டுள்ளனர்’’ என்றார்.